கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: புஜாரா சதத்தால் சரிவை சமாளித்தது இந்தியா முதல் நாளில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது + "||" + First Test against Australia: India has managed to cope with the pujara century

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: புஜாரா சதத்தால் சரிவை சமாளித்தது இந்தியா முதல் நாளில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: புஜாரா சதத்தால் சரிவை சமாளித்தது இந்தியா முதல் நாளில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்தது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் புஜாராவின் சதத்தால் சரிவை சமாளித்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் புஜாராவின் சதத்தால் சரிவை சமாளித்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. 11 மாதங்களுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா திரும்பினார். ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைக்கவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதன்படி முரளிவிஜயும், லோகேஷ் ராகுலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். மிட்செல் ஸ்டார்க்கும், ஹேசில்வுட்டும் ஆஸ்திரேலிய அணியின் தாக்குதலை தொடுத்தனர். 2–வது ஓவரிலேயே ராகுல் (2 ரன்) ஆப்–ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை அடிக்க முயற்சித்து ஸ்லிப்பில் நின்ற பிஞ்சிடம் கேட்ச் ஆனார். 2–வது விக்கெட்டுக்கு புஜாரா ஆட வந்தார்.

கோலி 3 ரன்

ஆடுகளத்தில் பந்து ஓரளவு பவுன்ஸ் ஆனது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் கொடுத்த குடைச்சலில் விஜயும் (11 ரன்) காலியானார். இதைத் தொடர்ந்து ‘ரன்குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கேப்டன் விராட் கோலி மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே களம் கண்டார். ஆனால் அவரும் தாக்குப்பிடிக்கவில்லை. டாப்–2 வீரர்களை போன்றே கோலியும் வெளியே நகர்ந்து சென்ற பந்தை விரட்ட முயற்சித்து சிக்கினார். கோலி (3 ரன், 16 பந்து) அடித்த பந்தை ‘கல்லி’ திசையில் நின்ற கஜாவா இடது பக்கமாக பாய்ந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து பிரமிக்க வைத்தார். கடந்த பயணத்தில் இந்த மைதானத்தில் இரண்டு இன்னிங்சிலும் செஞ்சுரி போட்ட கோலி இந்த முறை ஏமாற்றினார். அவருக்கு பிறகு வந்த துணை கேப்டன் ரஹானேவும் (13 ரன்) நிலைக்கவில்லை.

பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் முதல்பகுதியில் தான் பந்துவீச்சின் சீற்றம் அதிகமாக காணப்படும். அதை சமாளித்து விட்டால் அதன் பிறகு பேட்ஸ்மேன்களின் ஜாலம் தலைதூக்கும். இந்த சூட்சுமத்தை புரிந்து கொண்ட புஜாரா மிகவும் நிதானத்தை கடைபிடித்தார். 11 ரன்னில் இருந்து அடுத்த ரன் எடுக்க மட்டும் 30 பந்துகளை எதிர்கொண்டார்.

ரோகித் சர்மா 37 ரன்

மோசமான ஷாட்டுகளால் 41 ரன்னுக்குள் 4 முன்னணி விக்கெட்டுகளை (20.2 ஓவர்) தாரைவார்த்து இந்திய அணி தள்ளாடிய போது, ரோகித் சர்மா புஜாராவுடன் கைகோர்த்து சற்று வேகமாக மட்டையை சுழட்டினார். சில சிக்சர்களை பறக்க விட்டு பரவசப்படுத்தினார். நாதன் லயனின் பந்து வீச்சில் எல்லைக்கோட்டுக்கு தூக்கியடித்த ரோகித் சர்மா (37 ரன், 61 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) அடுத்த பந்தில் மீண்டும் சிக்சருக்கு முயன்று கேட்ச் ஆகிப்போனார்.

விக்கெட் சரிவுக்கு மத்தியில் புஜாரா மட்டும் மனம் தளராமல் போராடினார். வேகப்பந்து வீச்சு மட்டுமின்றி, நாதன் லயனின் சுழல் அச்சுறுத்தலையும் திறம்பட சமாளித்தார். புஜாராவுக்கு, விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டும் (25 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஸ்வினும் (25 ரன், 76 பந்து, ஒரு பவுண்டரி) நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அணி கவுரவமான நிலையை எட்டுவதற்கு உதவினர். இதில் அஸ்வின்–புஜாரா கூட்டணி 7–வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் திரட்டினர். இந்த இன்னிங்சில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். இவர்களுக்கு பிறகு வந்த இஷாந்த் ‌ஷர்மா 4 ரன்னில் வீழ்ந்தார்.

புஜாரா சதம்

மறுமுனையில் சதத்தை நெருங்கிய புஜாரா, ஹேசில்வுட் ஷாட்பிட்சாக வீசிய பந்தை சிக்சருக்கும், அடுத்த பந்தை பவுண்டரிக்கும் அனுப்பியதோடு மறுஓவரில் தனது 16–வது சதத்தை பூர்த்தி செய்தார். அணியை இக்கட்டான தருணத்தில் இருந்து காப்பாற்றிய புஜாரா, ஆஸ்திரேலிய மண்ணில் முகர்ந்த முதல் சதம் இதுவாகும்.

மூன்று இலக்கத்தை தொட்ட பிறகு புஜாராவின் பேட்டிங்கில் வேகமெடுத்தது. ஆனால் கடைசியில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு புஜாரா (123 ரன், 246 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்–அவுட் ஆனார். அதாவது பந்தை பீல்டிங் செய்த கம்மின்ஸ், சரியாக ஸ்டம்பை தகர்த்து, புஜாராவை வெளியேற்றினார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 87.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

2–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

‘தொடக்க வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடியிருக்க வேண்டும்’–புஜாரா

அடிலெய்டு டெஸ்டில் கடினமான சூழலிலும் மனஉறுதியுடன் மல்லுகட்டி தனது 16–வது சதத்தை விளாசிய புஜாராவை, சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், லட்சுமண் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் டுவிட்டரில் பாராட்டியுள்ளனர். முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு 30 வயதான புஜாரா நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல் இரண்டு பகுதியில் (தேனீர் இடைவேளை வரை) ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. இது போன்ற ஆடுகளங்களில் பொறுமை காத்து, ஏதுவான பந்துகளை மட்டும் அடிக்க வேண்டும் என்பதை அறிவேன். இருப்பினும் எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் இன்னும் நன்றாக பேட்டிங் செய்திருக்க வேண்டும். தங்களது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு 2–வது இன்னிங்சில் நன்றாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன்.

நான் பேட்டிங் செய்யும் போது, எதிரணி பேட்ஸ்மேன்கள் வார்த்தை மோதலில் (சிலெட்ஜிங்) ஈடுபட முயற்சித்தால் அது பற்றி கவலைப்படுவதில்லை. அவ்வாறு சீண்டினால், அது எனக்குள் உத்வேகம் அளிப்பதாகவே இருக்கும்.

‘இது சிறந்த ஆட்டங்களில் ஒன்று’ என்று சக வீரர்கள் என்னை பாராட்டினர். என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது டாப்–5 சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக இதை மதிப்பிடுகிறேன். தற்போது அணி எடுத்துள்ள ரன், ஓரளவு நல்ல ஸ்கோர் தான். ஏனெனில் பேட்டிங் செய்வதற்கு இது எளிதான ஆடுகளம் அல்ல. குறிப்பாக ஆடுகளத்தன்மை இருவித தன்மை கொண்டதாக காணப்பட்டது.

சில சமயம் டி.வி.யில் பார்க்கும் போது, ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை துல்லியமாக அறிய முடியாது. அதனால் இந்த ஆடுகளம் பற்றி எனது அனுபவத்தை எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுடன் பகிர்ந்து கொள்வேன். ஆடுகளத்தில் பந்து போதுமான அளவுக்கு சுழன்று திரும்புவதால், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முக்கிய பங்கு வகிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு புஜாரா கூறினார்.

5 ஆயிரம் ரன்களை கடந்தார், புஜாரா

*புஜாரா 95 ரன்கள் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் பட்டியலில் 12–வது வீரராக இணைந்தார். 65–வது டெஸ்டில் ஆடும் புஜாரா 108–வது இன்னிங்சில் பேட் செய்து இந்த இலக்கை எட்டியிருக்கிறார். இதில் இன்னொரு வி‌ஷயம் என்னவென்றால் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும் 5 ஆயிரம் ரன்களை தனது 108–வது இன்னிங்சில் தான் எட்டியிருந்தார். அது மட்டுமின்றி 3 ஆயிரம் ரன்களையும், 4 ஆயிரம் ரன்களையும் இருவரும் ஒரே எண்ணிக்கையிலான இன்னிங்சில் (67 மற்றும் 84 இன்னிங்ஸ்) கடந்தது மற்றொரு ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

*புஜாரா ரன்–அவுட் ஆவது இது 8–வது நிகழ்வாகும். இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட் (13), தெண்டுல்கர் (9) ஆகியோருக்கு அடுத்து அதிக முறை ரன்–அவுட்டில் சிக்கியது புஜாரா தான்.

*புஜாராவின் 123 ரன்கள், அடிலெய்டில் இந்திய தரப்பில் பதிவான 14–வது சதமாகும். வெளிநாட்டு மைதானங்களில் இந்திய வீரர்கள் அதிக சதங்கள் அடித்த இடம் வெஸ்ட் இண்டீசின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க். இங்கு இந்திய தரப்பில் 15 சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து அதிகபட்சமாக கொழும்பு எஸ்.எஸ்.சி, அடிலெய்டில் தலா 14 சதங்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது.

*ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக 26 வயதான மார்கஸ் ஹாரிஸ் இடம் பிடித்தார். இவர் ஆஸ்திரேலியாவின் 456–வது டெஸ்ட் வீரர் ஆவார்.