இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி திணறல்


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி திணறல்
x
தினத்தந்தி 7 Dec 2018 6:04 AM GMT (Updated: 7 Dec 2018 6:04 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.  இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் புஜாராவின் சதத்தின் உதவியுடன் 250 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. 

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆரோன் பிஞ்ச் போல்டு ஆகி வெளியேறினார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும், மார்கஸ் ஹரிசும் மிகவும் கவனத்துடன் பேட் செய்தனர். 

இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அஷ்வின்,  மார்கஸ் ஹரிசை அவுட் ஆக்கினார்.  அடுத்து வந்த வீரர்களான ஷான் மார்ஷ் (2 ரன்கள்), ஹாண்ட்ஸ்கோம்ப் (34 ரன்கள்) டிம் பெய்ன் (5 ரன்கள்) என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்கள் முடிவில் 138 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியை விட இன்னும் 112 ரன்கள் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் பின் தங்கியுள்ளது. டிராவிஸ் ஹெட் 32 ரன்களுடனும், பட் கம்மின்ஸ் ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர். 


Next Story