பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது


பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 8:53 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அபுதாபி,

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நிகோல்ஸ் சதம்

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் கடந்த 3–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 274 ரன்களும், பாகிஸ்தான் 348 ரன்களும் எடுத்தன.

74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 60 ரன்களுடன் தடுமாறியது. பிறகு கேப்டன் கனே வில்லியம்சனும், ஹென்றி நிகோல்சும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். 4–வது நாள் முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிகோல்ஸ் 90 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. வில்லியம்சன் முந்தைய நாள் ரன்னிலேயே (139) எல்.பி.டபிள்யூ. ஆனார். தனது 3–வது சதத்தை பூர்த்தி செய்த நிகோல்ஸ் 126 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

49 ஆண்டுகளுக்கு பிறகு...

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கு என்பதால் ‘டிரா’ செய்யும் நோக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 56.1 ஓவர்களில் 156 ரன்னில் சுருண்டது. பாபர் அசாம் (51 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முகமது ஹபீஸ் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜஸ் பட்டேல், சோமர்வில்லே மற்றும் டிம் சவுதி தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். 123 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெளிநாட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 49 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமாக்கி இருக்கிறது. இதற்கு முன்பு 1969–ம் ஆண்டு பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் 1–0 என்ற கணக்கில் தோற்கடித்து இருந்தது.

நியூசிலாந்து கேப்டன் வில்லயம்சன் ஆட்டநாயகனாகவும், இந்த தொடரில் மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story