கிரிக்கெட்

அடிலெய்டு டெஸ்டில் அஸ்வின் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலிய அணி திணறல் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது + "||" + Adelaide Test Ashwin's excellent bowling: Australian team stuttering

அடிலெய்டு டெஸ்டில் அஸ்வின் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலிய அணி திணறல் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது

அடிலெய்டு டெஸ்டில் அஸ்வின் அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலிய அணி திணறல் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது
அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணியை இந்திய பவுலர்கள் திணறடித்தனர்.

அடிலெய்டு,

அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணியை இந்திய பவுலர்கள் திணறடித்தனர்.

இந்தியா 250 ரன்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாராவின் சதத்தால் (123 ரன்) சரிவில் இருந்து தப்பித்ததுடன், தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ‌ஷமி 6 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் 2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்தியாவின் எஞ்சிய ஒரு விக்கெட்டும் முதல் பந்திலேயே விழுந்தது. ஹேசில்வுட், ஷாட்பிட்ச்சாக லெக்சைடில் வீசிய பந்தில் முகமது ‌ஷமி விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது.

பிஞ்ச் டக்–அவுட்

அடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும், அறிமுக வீரர் மார்கஸ் ஹாரிசும் இறங்கினர். இஷாந்த் ‌ஷர்மா வீசிய 3–வது பந்தில் பிஞ்ச் (0) கிளீன் போல்டு ஆனார். இன்ஸ்விங்காக ஊடுருவிய அந்த பந்து இரண்டு ஸ்டம்புகளை சிதறடித்தது. இதனால் ஆரம்பத்திலேயே நிலைகுலைந்த ஆஸ்திரேலியாவுக்கு, இந்திய பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி எளிதில் ரன் எடுக்க விடாமல் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார்.

வேகமாக ரன்கள் எடுப்பதை விட, விக்கெட்டை காப்பாற்றுவதில் மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்கள் குறியாக இருந்ததால், ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. உணவு இடைவேளைக்குள் இந்திய பவுலர்கள் 12 மெய்டன்களை வீசி பிரமாதப்படுத்தினர். இதற்கிடையே புதுமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் (26 ரன், 57 பந்து), அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் அருகில் நின்ற விஜயிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷான் மார்சும் (2 ரன்) அஸ்வினின் சுழலில் சிக்கினார்.

கவாஜா 28 ரன்

இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சு, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரள வைத்தது. தள்ளாடிய அணியை மீட்டெடுக்க போராடிய கவாஜா (28 ரன், 125 பந்து, ஒரு பவுண்டரி) அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் ஆனார். முதலில் நடுவர் அவுட் வழங்கவில்லை. பிறகு இந்திய வீரர்கள் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, பந்து அவரது கையுறையில் லேசாக உரசுவது தெரிய வந்ததால் நடுவர் விரலை உயர்த்தினார்.

இதன் பின்னர் டிராவிஸ் ஹெட்டும், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ஸ்கோர் 120 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. ஹேன்ட்ஸ்கோம்ப் 34 ரன்களில் (93 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னில் நடையை கட்டினார். அப்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுடன் தத்தளித்தது. இந்தியாவும் முதல் இன்னிங்சில் இதே போன்று 127 ரன்களை எட்டிய போது தனது 6–வது விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா 191 ரன்

விக்கெட் சரிவுக்கு இடையே டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைகொண்டு ஆடினார். இந்தியாவின் வேகம், சுழல் இரண்டையும் சரியாக கணித்து செயல்பட்ட அவர் அரைசதத்தை கடந்தார். தனது 3–வது டெஸ்டில் ஆடும் ஹெட்டுக்கு இது 2–வது அரைசதமாகும். அவருக்கு சற்று ஒத்துழைப்பு தந்த கம்மின்ஸ் 10 ரன்னில் (47 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்களுடனும் (149 பந்து, 6 பவுண்டரி), மிட்செல் ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், பும்ரா, இஷாந்த் ‌ஷர்மா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணி இன்னும் 59 ரன்கள் பின்தங்கி இருக்கும் நிலையில் 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். தற்போதைய சூழலில் இந்த டெஸ்ட் இரண்டு அணிக்கும் சரிசம வெற்றி வாய்ப்புடன் மதில்மேல் பூனையாக இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஷான் மார்சின் 130 ஆண்டு கால மோசமான சாதனை

*ஆஸ்திரேலிய வீரர் 35 வயதான ஷான் மார்ஷ், அஸ்வின் ஆப்–ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை அடித்த போது பந்து பேட்டின் உள்பகுதியில் உரசிக்கொண்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. மார்ஷ் 2 ரன்னுடன் வெளியேறினார். முந்தைய 5 இன்னிங்சில் அவர் 7, 7, 0, 3, 4 ரன் வீதமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய டாப்–5 பேட்ஸ்மேன்களில் ஒருவர் தொடர்ந்து 6–வது முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழப்பது 1888–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். 130 ஆண்டு கால மோசமான சாதனை அவரது வசம் சென்று விட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் விமர்சித்தன.

*‘ஆமை’ வேகத்தில் பேட்டிங் செய்து உள்ளூர் ரசிகர்களை வெறுப்பேற்றிய ஆஸ்திரேலிய அணி 2–வது நாள் முழுவதும் விளையாடி 88 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் ரன்ரேட் விகிதம் 2.17. கடந்த 1990–ம் ஆண்டில் இருந்து சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது குறைந்த ரன்ரேட் இது தான்.

*இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா, டிம் பெய்னின் விக்கெட்டை வீழ்த்திய போது, அது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது 50–வது விக்கெட்டாக (23 டெஸ்ட்) அமைந்தது.

ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்ட யுக்தி; தெண்டுல்கர் வியப்பு

அடிலெய்டு டெஸ்டின் 2–வது நாள் ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்திய அணி தனது பிடியை நழுவ விட்டுவிடக்கூடாது. வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இப்படியொரு தடுப்பாட்ட யுக்தியை கையாண்டதை எனது அனுபவத்தில் இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இப்போதைக்கு நமது அணியின் கை ஓங்கி இருப்பதற்கு அவர் தான் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஒவ்வொரு ரன்னும் முக்கியம்’ – அஸ்வின்

3 முன்னணி விக்கெட்டுகளை கபளீகரம் செய்து கலக்கிய இந்திய சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் இருந்து உத்வேகம் பெறும் அணியின் கையே இந்த டெஸ்டில் ஓங்கி நிற்கும். தற்போது இந்த டெஸ்ட் போட்டி இரு அணிக்கும் சரிசமமான வாய்ப்பில் இருப்பதாக நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் ரன் எடுப்பது எளிதான வி‌ஷயமல்ல. இனி எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் தங்கம் போன்று மதிப்பு மிக்கதாக இருக்கும்’ என்றார்.

ஆஸ்திரேலிய புதுமுக வீரர் மார்கஸ் ஹாரிஸ் கூறுகையில், ‘இந்திய பவுலர்கள் உண்மையிலேயே அபாரமாக பந்து வீசினர். இது கடினமான நாளாக அமைந்தது. ரன் எடுக்க சிரமப்பட்டோம். நாங்கள் ஓரளவு நல்ல நிலையில் தான் உள்ளோம். இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். போட்டி எங்களது கையை விட்டு போகவில்லை’ என்றார்.