டோனியின் சாதனையை சமன் செய்தார், ரிஷாப் பான்ட்


டோனியின் சாதனையை சமன் செய்தார், ரிஷாப் பான்ட்
x
தினத்தந்தி 8 Dec 2018 9:30 PM GMT (Updated: 8 Dec 2018 8:21 PM GMT)

இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், முதலாவது இன்னிங்சில் 6 கேட்ச் செய்தார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் செய்த டோனியின் சாதனையை சமன் செய்தார்.

*இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், முதலாவது இன்னிங்சில் 6 கேட்ச் செய்தார். இதன் மூலம் இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரு இன்னிங்சில் அதிக கேட்ச் செய்த டோனியின் சாதனையை சமன் செய்தார். 2009-ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் டோனி, இவ்வாறு 6 பேரை கேட்ச் மூலம் வெளியேற்றி இருந்தார்.

*இந்திய கேப்டன் விராட் கோலி 5 ரன் எடுத்த போது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களை வேகமாக கடந்த இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். ஆஸ்திரேலியாவில் அவர் 9 டெஸ்டில் விளையாடி 5 சதம், 2 அரைசதம் உள்பட 1,029 ரன்கள் சேர்த்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களை தாண்டிய 4-வது இந்தியர் கோலி ஆவார். ஏற்கனவே தெண்டுல்கர் (1,809 ரன்), வி.வி.எஸ்.லட்சுமண் (1,236 ரன்), ராகுல் டிராவிட் (1,143 ரன்) ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர். ஷேவாக்கும் இங்கு இந்த மைல்கல்லை கடந்திருக்கிறார். ஆனால் அதில் இந்திய அணிக்காக 948 ரன்கள், ஐ.சி.சி. உலக லெவன் அணிக்காக 83 ரன்கள் வீதம் எடுத்துள்ளார்.

* ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்டில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவது இது 14-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு இவ்வாறு முன்னிலை பெற்ற டெஸ்டுகளில் 3-ல் இந்தியாவும், 3-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 7 போட்டி டிராவில் முடிந்தது.

* விராட் கோலி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்து வீச்சில் 6-வது முறையாக விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய பவுலர் இவர் தான். இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா 5 முறை சாய்த்து இருக்கிறார்கள்.

Next Story