கிரிக்கெட்

முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர் + "||" + Dhoni's captainship Gambhir strongly criticized

முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர்

முத்தரப்பு தொடரில் எடுத்த அதிர்ச்சி முடிவு: டோனியின் கேப்டன்ஷிப்பை கடுமையாக விமர்சித்த கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய கவுதம் கம்பீர், ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியுடன் நேற்று ஓய்வு பெற்றார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடிய கவுதம் கம்பீர், ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியுடன் நேற்று ஓய்வு பெற்றார். டெல்லியை சேர்ந்த 37 வயதான கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், முன்னாள் கேப்டன் டோனியை விமர்சித்துள்ளார். கம்பீர் கூறியதாவது:–

2012–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த டோனி யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 2015–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி இருப்பதால், இந்த முத்தரப்பு தொடரில் மூன்று மூத்த வீரர்களையும் (சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், கவுதம் கம்பீர்) ஒன்றாக சேர்த்து ஆட வைக்க முடியாது. சுழற்சி அடிப்படையில் மூன்று பேருக்கும் மாற்றி மாற்றி வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார். இந்த தொடரிலேயே 2015–ம் ஆண்டு உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்ய அவர் முடிவு செய்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல, எந்த ஒரு வீரருக்கும் இது அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். 2015–ம் ஆண்டு உலக கோப்பையில் நீ இருக்க மாட்டாய் என்று 2012–ம் ஆண்டிலேயே ஒருவர் சொல்வது இதற்கு முன்பு யாரும் கேள்விப்படாத ஒன்று. என்னை பொறுத்தவரை தொடர்ந்து ரன் குவித்து அசத்தினால், வயது ஒரு பிரச்சினையே கிடையாது.

அந்த தொடரின் தொடக்கத்தில், நாங்கள் மூன்று பேரும் ஒருசேர இணைந்து விளையாடவில்லை. ஆனால் அடுத்தடுத்து தோல்விகளால் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் மூன்று பேரையும் ஆடும் லெவனில் சேர்த்து விளையாட டோனி முடிவு செய்தார். அதன்படி ஹோபர்ட்டில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தெண்டுல்கரும், ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். நான் 3–வது வரிசையிலும், விராட் கோலி 4–வது வரிசையிலும் ஆடினோம். அந்த ஆட்டத்தில் 37 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டிய நிலையில் அதை அடைந்தோம்.

நீங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டால், அதில் தெளிவாக இருக்கவேண்டும். ஏற்கனவே முடிவு செய்து விட்ட ஒன்றில் இருந்து பின்வாங்க கூடாது. முதலில் டோனி 3 பேருடன் சேர்ந்து ஆட முடியாது என்று கூறினார். அதன் பிறகு எங்கள் 3 பேருடன் இணைந்து ஆட முடிவு செய்தார். இதில் இருந்து அவர் முதலில் எடுத்த முடிவு தவறானதா? அல்லது 2–வது எடுத்த முடிவு தவறானதா? எல்லா முடிவுகளையும் கேப்டனாக இருந்த அவரே எடுத்தார். அணியில் வீரர்களாக அங்கம் வகித்த 3 பேருக்கும் அவரது முடிவுகள் பேரதிர்ச்சியாக இருந்தது.

இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.

கம்பீர் குறிப்பிட்ட அந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது. அந்த தொடரில் இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 373 ரன்களும் (8 ஆட்டம்), கவுதம் கம்பீர் 308 ரன்களும் (7 ஆட்டம்), ஷேவாக் 65 ரன்களும் (5 ஆட்டம்), தெண்டுல்கர் 143 ரன்களும் (7 ஆட்டம்) எடுத்தனர்.