ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி


ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை சாய்த்து தமிழக அணி முதல் வெற்றி
x
தினத்தந்தி 9 Dec 2018 9:30 PM GMT (Updated: 9 Dec 2018 7:17 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.

சென்னை, 

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணி, கேரளாவை சாய்த்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.

தமிழக அணி வெற்றி

ரஞ்சி கிரிக்கெட் தொடரில், தமிழ்நாடு – கேரளா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 6–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தமிழ்நாடு 268 ரன்களும், கேரளா 152 ரன்களும் எடுத்தன. 116 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 7 விக்கெட்டுக்கு 252 ரன்களுடன் டிக்ளேர் செய்து 369 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய கேரளா 3–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 27 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட் செய்த கேரள அணி ஒருகட்டத்தில், 2 விக்கெட்டுக்கு 157 ரன்களுடன் வலுவான நிலையில் காணப்பட்டது. ஜோசப் (55 ரன்), சஞ்சு சாம்சன் (91 ரன்) ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. அந்த அணி 89 ஓவர்களில் 217 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் தமிழக அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 5 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர், பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த சீசனில் 5–வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணிக்கு கிட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். முந்தைய 4 ஆட்டங்களில் 3–ல் டிராவும், ஒன்றில் தோல்வியும் கண்டிருந்தது.

விடைபெற்றார், கம்பீர்

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நடந்த ஆந்திராவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) டெல்லி அணி முதல் இன்னிங்சில் 433 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. 43 ரன்கள் பின்தங்கிய நிலையில் கடைசி நாளில் 2–வது இன்னிங்சில் ஆடிய ஆந்திரா 59 ஓவர்களில் 130 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதையடுத்து 88 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது.

முதல் இன்னிங்சில் 112 ரன்கள் விளாசிய டெல்லி அணியின் மூத்த வீரர் கவுதம் கம்பீர் இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். போட்டி முடிந்ததும் மைதானத்தில் வலம் வந்த கம்பீர், ரசிகர்களுடன் கைகுலுக்கி விடைபெற்றார். அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.


Next Story