கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைக்குமா? அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு + "||" + Will Australia defeat and make history? The Indian team will have a chance to win

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைக்குமா? அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைக்குமா? அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு
அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

அடிலெய்டு, 

அடிலெய்டில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் எடுத்தன. 15 ரன் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3–வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று புஜாராவும், ரஹானேவும் தொடர்ந்து விளையாடினர். அணிக்கு வலுவூட்டும் வகையில் நிதானமாக ஆடிய இவர்கள், ஆஸ்திரேலியாவின் தாக்குதலை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சமாளித்தனர். ரஹானே 17 ரன்னில் கேட்ச் ஆனதாக அவுட் கொடுக்கப்பட்ட போது, டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தார். ரீப்ளேயில், பந்து பேட்டிலோ அல்லது கையுறையிலோ உரசவில்லை என்பது தெரிய வந்ததால் தீர்ப்பு மாற்றப்பட்டது.

புஜாரா, ரஹானே அரைசதம்

மறுமுனையில் அரைசதத்தை கடந்த புஜாரா அணியின் ஸ்கோர் 234 ரன்களை எட்டிய போது லயனின் பந்து வீச்சில் அருகில் நின்ற பிஞ்சிடம் கேட்ச் ஆனார். 71 ரன்களுடன் (204 பந்து, 9 பவுண்டரி) பெவிலியன் திரும்பிய புஜாரா லயனின் பந்து வீச்சில் ஆட்டம் இழப்பது இது 8–வது முறையாகும். அடுத்து வந்த ரோகித் சர்மா (1 ரன்) லயனின் சுழலில் சிக்கினார். தொடர்ந்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் வந்தார். அதிரடி காட்டிய பான்ட், லயனின் ஒரே ஓவரில் தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார். ஆனால் லயனின் அடுத்த ஓவரில் பான்ட் (28 ரன், 16 பந்து) பந்தை மீண்டும் தூக்கியடித்த போது கேட்ச் ஆகிப்போனார்.

சில நேர்த்தியான பவுண்டரிகளை ஓடவிட்டு ரசிக்க வைத்த ரஹானே தனது 16–வது அரைசதத்தை கடந்தார். அவர் 70 ரன்களில் (147 பந்து, 7 பவுண்டரி) லயனின் பந்து வீச்சில் இடக்கை பேட்ஸ்மேன் போல் திரும்பி அடித்த போது (ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்) கேட்ச் ஆனார். இந்தியாவின் கடைசி கட்ட வீரர்கள் சிறிது கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. 350 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்த்த வேளையில் கடைசி 4 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 2–வது இன்னிங்சில் இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுப்பது இது 13–வது நிகழ்வாகும்.

323 ரன் இலக்கு

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் இதற்கு முன்பு யாரும் 320 ரன்களுக்கு மேலான ஸ்கோரை விரட்டிப்பிடித்ததில்லை. கடின இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் பந்திலேயே விக்கெட்டுடன் தொடங்கி இருக்க வேண்டியது. தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச், இஷாந்த் ‌ஷர்மாவின் முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். உடனடியாக டி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்தின்படி பிஞ்ச் அப்பீல் செய்தார். டி.வி. ரீப்ளேயில் இஷாந்த் ‌ஷர்மா நோ–பாலாக வீசியது தெரிய வந்ததால் பிஞ்ச் தப்பி பிழைத்தார். ஆனாலும் பிஞ்ச் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர் 11 ரன்னில், அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் சிக்கினார். இந்திய பவுலர்கள் கொடுத்த குடைச்சலில் மார்கஸ் ஹாரிஸ் (26 ரன்), உஸ்மான் கவாஜா (8 ரன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (14 ரன்) சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.

4–வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது. ஷான் மார்ஷ் 31 ரன்களுடனும் (92 பந்து, 3 பவுண்டரி), டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடனும் (37 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஸ்வின், முகமது ‌ஷமி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

வரலாறு படைக்குமா இந்தியா?

இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்தியாவின் வெற்றிக்கு எதிரணியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 219 ரன்கள் தேவை. தற்போதைய சூழலில் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. 5–வது மற்றும் கடைசி நாளான இன்று, முதல் பகுதி மிகவும் முக்கியமானது. அதற்குள் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோரை வெளியேற்றி விட்டால், ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக திரும்பி விடும்.

இது இந்திய அணியின் 12–வது ஆஸ்திரேலிய பயணமாகும். முந்தைய 11 பயணங்களிலும் இந்திய அணி தங்களது முதலாவது டெஸ்டுகளில் (9–ல் தோல்வி, 2–ல் டிரா) வெற்றி பெற்றதில்லை. எனவே இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்பது இன்று தெரிந்து விடும்.

புஜாரா, லயன் சாதனை

*ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றுவது இது 6–வது முறையாகும். இந்த வகையில் இலங்கையின் முரளிதரனுக்கு (7 முறை) பிறகு இந்தியாவுக்கு எதிராக அதிகமாக சாதித்தது லயன் தான்.

*இந்திய வீரர் புஜாரா இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 450 பந்துகளை சந்தித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்டில் அதிக பந்துகளை சந்தித்த இந்திய பேட்ஸ்மேன்களில் 2–வது இடத்தை புஜாரா பெற்றுள்ளார். சச்சின் தெண்டுல்கர் ஏற்கனவே 2004–ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் 525 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்தார்.

*இந்திய அணி இதற்கு முன்பு அடிலெய்டில் ஒரு முறை மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. 2003–ம் ஆண்டு வெற்றி கிடைத்த போது, அந்த டெஸ்டில் 3–வது பேட்டிங் வரிசையில் ஆடிய ராகுல் டிராவிட் தனது 16–வது சதத்தையும், 2–வது இன்னிங்சில் அரைசதமும் நொறுக்கினார். அதே போன்று இப்போது 3–வது வரிசையில் ஆடிய புஜாரா தனது 16–வது சதத்தை எட்டியதோடு 2–வது இன்னிங்சில் அரைசதமும் அடித்திருக்கிறார். அதனால் இந்த டெஸ்டிலும் இந்தியாவுக்கு வெற்றிக்கனி கிட்டுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.