கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி + "||" + India 6th win in Australia

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் 6-வது வெற்றி
ஆஸ்திரேலியாவில் 45-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணிக்கு இது 6-வது வெற்றியாகும்.
அடிலெய்டு,

* ஆஸ்திரேலிய மண்ணில் 45-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணி பெற்ற 6-வது வெற்றி இதுவாகும். கடினமான அடிலெய்டு மைதானத்தில் 12 டெஸ்டில் விளையாடி இந்திய அணி ருசித்த 2-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு இங்கு 2003-ம் ஆண்டில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கடைசியாக 2008-ம் ஆண்டில் பெர்த்தில் நடந்த டெஸ்டில் வெற்றியை ருசித்து இருந்தது.


* ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முந்தைய 11 சுற்றுப்பயணத்தில் 9 தொடக்க ஆட்டத்தில் தோல்வியும், 2 முறை டிராவும் கண்டு இருந்தது.

* அடிலெய்டில் கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு மேலான இலக்கை ஒரு போதும் விரட்டி பிடித்ததில்லை. அவர்களின் அந்த சோகம் தற்போதும் தொடருகிறது.

* குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 2004-ம் ஆண்டில் மும்பையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 13 ரன் வித்தியாசத்திலும், 1972-73-ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

* முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி 50 ரன்களுக்குள் முதல் 4 விக்கெட்டுகளை இழந்து அன்னிய மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.

* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாட்டிலும் வெற்றி தேடித்தந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட்கோலி பெற்றுள்ளார். ஆசிய நாட்டில் இருந்து வேறு எந்தவொரு கேப்டனும் செய்யாத ஒரு சாதனை இதுவாகும். ஏற்கனவே இந்த ஆண்டில் தென்ஆப்பிரிக்கா (ஜோகனஸ்பர்க் டெஸ்டில் 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி) மற்றும் இங்கிலாந்து (நாட்டிங்காம் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி) மண்ணிலும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது. ராகுல் டிராவிட், டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவில் வெற்றி பெற்றன. ஆனால் ஆஸ்திரேலியாவில் வென்றது கிடையாது.

* விராட் கோலி ‘டாஸ்’ ஜெயித்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றதாக வரலாறு கிடையாது. இதுவரை அவர் டாஸ் ஜெயித்த 20 டெஸ்டுகளில் இந்திய அணி 17-ல் வெற்றியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது.

* இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 11 கேட்ச் செய்தார். இதன் மூலம் ஒரு டெஸ்டில் அதிக கேட்ச் செய்த விக்கெட் கீப்பர்களான ஜாக் ரஸ்செல் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோரின் உலக சாதனையை ரிஷாப் பான்ட் சமன் செய்தார்.

* அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளையும் சேர்த்து 35 விக்கெட்டுகள் கேட்ச் முறையில் வீழ்ந்தன. கேட்ச் மூலம் அதிக விக்கெட்டுகள் சரிந்த டெஸ்ட் போட்டி இது தான். கடந்த மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் 34 விக்கெட்டுகள் கேட்ச் ஆனதே முந்தைய சாதனையாகும்.

* இந்த ஆண்டில் ஆசியாவுக்கு வெளியே இந்திய அணி மூன்று டெஸ்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே இவ்வாறு நடந்துள்ளது. 1968-ம் ஆண்டு இந்திய அணி, நியூசிலாந்து பயணத்தில் மூன்று டெஸ்டிலும் வெற்றி பெற்றிருந்தது.