கிரிக்கெட்

‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து + "||" + 'Starting with the Test series victory will give you inspiration' - Virat Kohli comment

‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து

‘டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ - விராட் கோலி கருத்து
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது உத்வேகம் அளிக்கும்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-


ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால் திருப்தி அடையமாட்டோம். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் இதனை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். கடந்த (2014) ஆஸ்திரேலிய பயணத்தின் போது அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றியை நெருங்கி தோல்வியை சந்தித்தோம். தற்போது வெற்றி பெற்றுள்ளோம். ஆஸ்திரேலிய மண்ணில் நமது அணி ஒரு முறையும் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றது கிடையாது. இந்த முறை முதல் டெஸ்ட் போட்டியை வென்று நல்ல தொடக்கம் கண்டு இருப்பது அணிக்கு மிகப்பெரிய ஊக்கமாகும்.

பெரிய போட்டி தொடரில் விளையாடுகையில் இதுபோன்ற வெற்றி சரியான உத்வேகத்தை அளிக்கும். 5 நாட்களும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் போராடி பெற்ற இந்த வெற்றி சிறப்பானதாகும். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்று இருப்பது என்பது அணியை பொறுத்தமட்டில் பெரிய சாதனையாகும். அன்னிய மண்ணில் பந்து வீச்சுக்கு அதிக அனுகூலம் இல்லாத நிலையிலும் 4 பந்து வீச்சாளர்களை வைத்து கொண்டு 20 விக்கெட்டுகளையும் (இரு இன்னிங்சிலும் சேர்ந்து) வீழ்த்தி இருப்பது நல்ல அறிகுறியாகும். நமது அணியின் ஒட்டு மொத்த செயல்பாடு நன்றாக இருந்தது. இதனை எல்லா ஆட்டங்களிலும் தொடர வேண்டும்.

முதல் நாள் ஆட்டம் எங்களுக்கு எதிராக இருந்தது. புஜாரா சிறப்பாக விளையாடி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார். அடுத்த 4 நாட்கள் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். கடைசி நாளில் நாங்கள் ஏதையும் எளிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆடுகளம் சற்று மெதுவாக இருந்தது. பந்து வீச கடினமாக இருந்தாலும் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணியின் பின்வரிசை வீரர்கள் எளிதில் விக்கெட்டை இழக்கமாட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆஸ்திரேலிய அணியின் பின்வரிசை வீரர்கள் கடந்த சில வருடங்களாக நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். நமது அணியின் பின்வரிசை மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டால் நன்றாக இருக்கும். இவ்வாறு விராட்கோலி கூறினார்.

டிம் பெய்ன் கருத்து

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வியை ஏற்றுக்கொள்வது கடினமாக தான் இருக்கிறது. எல்லா டெஸ்ட் போட்டியும் சவால் நிறைந்தது தான். இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடர் கடும் நெருக்கமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த போட்டியில் நாங்களும் வெற்றிக்காக கடுமையாக போராடினோம். இந்திய அணி எங்களை விட சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது. முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்வது எளிதான காரியமாக அமையவில்லை. ரன் அடிப்பது கடினமாக இருந்தது. இந்திய அணியினர் அருமையாக பந்து வீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். அந்த கடினமாக தருணத்தில் இருந்து மீண்டு எங்களால் வெளிவர முடியவில்லை. முதல் நாளில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். அதன் பிறகு நாங்கள் சிறிய சறுக்கலை சந்தித்தோம். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களது பின்வரிசை வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு போராடினார்கள். ஷான் மார்ஷ் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் வரும் ஆட்டங்களில் பெரிய ஸ்கோர் அடித்து எங்கள் அணி வெற்றிக்கு உதவுவார் என்று நம்புகிறேன். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு நம்பிக்கையுடன் செல்கிறோம்’ என்றார்.