2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்


2-வது டெஸ்ட் நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் - ஆஸ்திரேலிய கேப்டன், பயிற்சியாளர் உற்சாகம்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:15 PM GMT (Updated: 11 Dec 2018 8:13 PM GMT)

2-வது டெஸ்ட் போட்டி நடக்கும் பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன், பயிற்சியாளர் லாங்கர் உற்சாகம் ததும்ப கூறியுள்ளனர்.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் பயணத்தை முதல்முறையாக வெற்றியுடன் தொடங்கி இருக்கும் இந்திய அணி இப்போது அடுத்த போட்டிக்கு தயாராகி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

பெர்த்தில் வழக்கமாக ‘வாகா’ மைதானத்தில் தான் டெஸ்ட் போட்டி நடத்தப்படும். இந்த முறை அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி (இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா) தோல்வியை தழுவியது. டெஸ்ட் போட்டி இங்கு நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆடுகளத்தில் நிறைய புற்கள் விடப்பட்டுள்ளது. உலகின் அதிவேக ஆடுகளம் பெர்த் என்று சொல்லப்படுவது உண்டு. அதே பாணியிலேயே புதிய ஸ்டேடியத்தின் ஆடுகளமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு பயங்கரமாக எகிறும். நன்கு ஸ்விங்கும் ஆகும் என்று கூறியுள்ள ஆடுகள பராமரிப்பாளர் பிரெட் சிப்தோர்ப், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யக்கூடும் என்றும், இந்த டெஸ்ட் 4-வது நாளிலேயே முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘எங்களது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சு முதலாவது டெஸ்டில் சரியில்லை. ஆனால் அவர் முழு பார்மில் இருக்கும் போது, அவரை விட உலகில் சிறந்த பந்து வீச்சாளர் இருக்க முடியாது. குறிப்பாக புதிய பந்தில் மிரட்டக்கூடியவர். பெர்த் ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை அவருக்கு மிகவும் கச்சிதமாக இருக்கும். இது, மிகவும் அதிவேகம் கொண்டதாக இருக்கப்போகிறது என்று அறிகிறேன். அதனால் இந்த ஆடுகளம் அவருக்கு அனுகூலமாக இருக்கும்’ என்றார்.

அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘பெர்த் ஆடுகளத்தை பார்க்க மிகவும் ஆர்முடன் இருக்கிறேன். நியூ சவுத்வேல்ஸ்- மேற்கு ஆஸ்திரேலியா இடையே இங்கு நடந்த உள்ளூர் போட்டியை கொஞ்சம் பார்த்தேன். அப்போது ஓரளவு வேகத்துடன் கூடிய பவுன்ஸ் ஆடுகளமாக காணப்பட்டது. ‘வாகா’ ஆடுகளத்தின் தனித்துவம் இங்கும் தொடரும் என்று நம்புகிறேன். அவ்வாறு இருந்தால் உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அது சிறந்த விஷயமாக இருக்கும்’ என்றார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில், ‘பெர்த் ஆடுகளம் இந்தியாவை விட எங்களது வீரர்களுக்கே அதிக சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் ஆஸ்திரேலிய அணியினர் சீக்கிரமாக சரிவில் இருந்து எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும். இந்த போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யக்கூடாது. ஆரோன் பிஞ்சுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்றார்.

இதற்கிடையே 2-வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே யோசனை தெரிவித்துள்ளார். பேட்டிங்குடன், வேகப்பந்தும் வீசக்கூடிய மார்கஸ் ஸ்டோனிசை ஆடும் லெவன் அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.



Next Story