ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கோலி, ரஹானே அரைசதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா
x
தினத்தந்தி 15 Dec 2018 11:30 PM GMT (Updated: 15 Dec 2018 8:28 PM GMT)

பெர்த்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.


பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் டிம் பெய்ன் (16 ரன்), கம்மின்ஸ் (11 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து பேட் செய்தனர். முதல் ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்த பெய்ன், கம்மின்ஸ் ஜோடியினர் 300 ரன்களை கடக்க வைத்தனர். அணியின் ஸ்கோர் 310 ரன்களாக உயர்ந்த போது, கம்மின்ஸ் (19 ரன்) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்த ஓவரில் பும்ராவின் பந்து வீச்சில் கேப்டன் டிம் பெய்ன் (38 ரன், 89 பந்து, 5 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பெய்ன் பயன்படுத்திய போது, அது சரியான எல்.பி.டபிள்யூ என தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் (6 ரன்), ஹேசில்வுட் (0) ஆகியோர் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் அடுத்தடுத்து பிடிபட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 108.3 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. நாதன் லயன் 9 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும், பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. 12 பந்துகளை எதிர்கொண்டு ரன் கணக்கை தொடங்காத தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய்க்கு(0), ஸ்டார்க் வீசிய பந்து ஸ்டம்பை சிதறடித்தது. பந்து வெளியே போகக்கூடும் என்று விஜய் நினைத்த நிலையில், அது ‘இன்ஸ்விங்’ ஆகி ஸ்டம்பை பதம் பார்த்தது. ஸ்டார்க்கின் பந்து வீச்சில் விஜய் ஆட்டம் இழப்பது இது 6-வது முறையாகும். இதே போல திணறிய மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுலும் (2 ரன், 17 பந்து) நிலைக்கவில்லை. ஹேசில்வுட் வீசிய யார்க்கரில் கிளன் போல்டு ஆனார். ராகுல் தனது கடைசி 10 இன்னிங்ஸ்களில் 6-ல் பந்தை ஸ்டம்புக்குள் விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

8 ரன்னுக்குள் 2 விக்கெட்டை தாரைவார்த்து இந்திய அணி தள்ளாடிய நிலையில் புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். கோலி வந்த வேகத்தில், ஹேசில்வுட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். அதன் பிறகு அவசரமின்றி நிதானத்தை கடைபிடித்தார். மறுமுனையில் புஜாராவும், பொறுமையின் சிகரமாக செயல்பட்டார். ஆடுகளத்தில் பந்து நன்கு எழும்பி செல்வதும், சில பந்துகள் தாழ்வாக செல்வதும் என்று இருவித தன்மை நிலவியதால் அதற்கு ஏற்ப கணித்து ஆட வேண்டி இருந்தது. 11-வது ஓவரில் இருந்து 32-வது ஓவர் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. இதன் காரணமாக ஸ்கோர் மெதுவாகவே நகர்ந்தது.

புஜாரா 23 ரன்னில் இருந்த போது, எல்.பி.டபிள்யூ. கேட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் டி.ஆர்.எஸ்.-ன் படி முறையிட்டனர். அதற்கு பலன் கிட்டவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஸ்டார்க் லெக்சைடில் வீசிய பந்தை புஜாரா (24 ரன், 103 பந்து, ஒரு பவுண்டரி) தடுத்து ஆட முற்பட்ட போது, பேட்டில் லேசாக உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச்சாக தஞ்சம் புகுந்தது.

பின்னர் இறங்கிய துணை கேப்டன் ரஹானே, பதற்றமின்றி சர்வ சாதாரணமாக விளையாடினார். சில அதிரடியான ஷாட்டுகளை விரட்டி நெருக்கடியை தணித்தார். ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ‘அப்பர்கட்’ செய்து சூப்பராக ஒரு சிக்சரும் பறக்க விட்டார். மறுமுனையில் விராட் கோலியும் கச்சிதமாக பேட்டை சுழட்டினார். இதனால் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. ஆஸ்திரேலியாவின் தாக்குதலை திறம்பட சமாளித்த இவர்கள் கடைசி வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். கோலி 109 பந்துகளில் தனது 20-வது அரைசதத்தை எட்டினார். ரஹானே 17-வது அரைசதத்தை கடந்தார்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும் (181 பந்து, 9 பவுண்டரி), ரஹானே 51 ரன்களுடனும் (103 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருக்கிறார்கள்.

இன்னும் 154 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி இன்று 3-வது நாளில் தொடர்ந்து விளையாடும்.

‘ஆதிக்கம் செலுத்துவோம்’ - இஷாந்த்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பால் வீசுவது குறித்து ஆஸ்திரேலிய ஊடகத்தினர் விவாதித்தனர். இதனால் அதிருப்திக்குள்ளான இஷாந்த் ஷர்மா நேற்று பேட்டி அளித்த போது, ‘நோ-பால் தொடர்பான கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய ஊடகத்தினரே பதில் சொல்லட்டும். நீண்ட காலமாக நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கிரிக்கெட்டில் இது மாதிரி நடப்பது சகஜம். தவறிழைப்பது மனிதனின் இயல்பு தானே. அதனால் இது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை’ என்றார்.

மேலும் இஷாந்த் கூறுகையில், ‘விராட் கோலி பேட்டிங் செய்யும் போதெல்லாம், எங்களுக்கு நம்பிக்கை வந்து விடும். நல்ல நிலையில் 2-வது நாள் ஆட்டத்தை முடித்து இருக்கிறோம். தற்போது இந்த போட்டி இரு அணிக்கும் சரிசம வாய்ப்பில் இருப்பதாக கருதுகிறேன். 3-வது நாளின் தொடக்கத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்துவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story