இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: டாம் லாதம் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 578 ரன்கள் குவிப்பு


இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: டாம் லாதம் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 578 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 11:19 PM GMT (Updated: 17 Dec 2018 11:19 PM GMT)

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாம் லாதம் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.

வெலிங்டன்,

இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 282 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 84 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 121 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 50 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் டாம் லாதம் நிலைத்து நின்று ஆடி 412 பந்துகளில் 16 பவுண்டரியுடன் இரட்டை சதத்தை எட்டினார். டாம் லாதம் அடித்த முதல் இரட்டை சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த 15-வது நியூசிலாந்து வீரர் டாம் லாதம் ஆவார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 157.3 ஓவர்களில் 578 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. டாம் லாதம் 489 பந்துகளில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 264 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் நியூசிலாந்து வீரர் எடுத்த 6-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் அதிக ரன்கள் குவித்த தொடக்க ஆட்டக்காரர் என்ற சாதனையை டாம் லாதம் படைத்தார். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் ஆட்டம் இழக்காமல் 244 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

296 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து தடுமாறியது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story