குறைந்த விலையில் யுவராஜ்; ஆகாஷ் அம்பானி ஆச்சரியம்


குறைந்த விலையில் யுவராஜ்; ஆகாஷ் அம்பானி ஆச்சரியம்
x
தினத்தந்தி 19 Dec 2018 9:15 PM GMT (Updated: 19 Dec 2018 9:03 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 அணிகளுக்காக பங்கேற்றுள்ள இந்திய மூத்த வீரர் யுவராஜ்சிங் அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கால்பதிக்கிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 அணிகளுக்காக பங்கேற்றுள்ள இந்திய மூத்த வீரர் யுவராஜ்சிங் அடுத்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கால்பதிக்கிறார். யுவராஜ்சிங்கின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2014-ம் ஆண்டில் ரூ.14 கோடிக்கும், 2015-ம் ஆண்டில் ரூ.16 கோடிக்கும், 2016-ம் ஆண்டில் ரூ.7 கோடிக்கும் விலை போன அவர் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு சென்றார். சரியாக ஆடாததால் அவரை பஞ்சாப் அணி கழற்றி விட்டது. இதனால் மறுபடியும் ஏலப்பட்டியலில் இடம் பெற்ற அவரது அடிப்படை விலை இந்த தடவை ரூ.1 கோடியாகத் தான் இருந்தது. ஆனாலும் முதலில் எந்த அணியும் அவரை எடுக்க முன்வரவில்லை. 2-வது ரவுண்டில் மும்பை அணி அடிப்படை விலைக்கே அவரை பெற்றது.

இது பற்றி மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ‘யுவராஜ்சிங்அற்புதமான ஒரு வீரர். அவரது கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. உண்மையிலேயே அவர் எங்கள் அணிக்கு தேவையாக இருந்தார். எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அனுபவ வீரர்கள் அதிகமாக இல்லை. யுவராஜ்சிங்கும், மலிங்காவும் (ரூ.2 கோடி) இந்த ஏலப்பட்டியலில் எங்களுக்கு முக்கிய வீரர்களாக இருந்தனர். இருவரும் 20 ஓவர் கிரிக்கெட்டில் நிறைய சாதித்து உள்ளனர். ஆனால் அடிப்படை தொகையிலேயே இருவரையும் வாங்க முடியும் என்று எதிர்பார்க்கவேஇல்லை. இந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். எங்கள் அணியின் சிறந்த வெளிநாட்டு வீரர் மலிங்கா. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்துவதில் அவர் தான் இப்போதும் ‘நம்பர் ஒன்’. அவரை எங்கள் அணியில் மீண்டும் இணைத்தது மகிழ்ச்சியே’ என்றார்.

37 வயதான யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்’ என்றார்.

Next Story