கிரிக்கெட்

மெல்போர்னில் 37 ஆண்டுகால ஏக்கத்தை தணிக்குமா இந்தியா? + "||" + In Melbourne Will India Wear 37 Years of Desire?

மெல்போர்னில் 37 ஆண்டுகால ஏக்கத்தை தணிக்குமா இந்தியா?

மெல்போர்னில் 37 ஆண்டுகால ஏக்கத்தை தணிக்குமா இந்தியா?
புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் 37 ஆண்டுகள் வெல்ல முடியாமல் தவிக்கும் இந்திய அணி இந்த தடவை அந்த ஏக்கத்தை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மெல்போர்ன், 

புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் 37 ஆண்டுகள் வெல்ல முடியாமல் தவிக்கும் இந்திய அணி இந்த தடவை அந்த ஏக்கத்தை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மெல்போர்னில்...

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர் சமநிலையை (1–1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் வருகிற 26–ந்தேதி தொடங்கும் 3–வது டெஸ்ட் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்போர்ன் 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டது. பாரம்பரியமிக்க இந்த மைதானத்தில் தான் முதல்முறையாக டெஸ்ட் போட்டி (1877–ம் ஆண்டு) நடந்தது.

இங்கு இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 63–ல் வெற்றியும், 30–ல் தோல்வியும், 17–ல் ‘டிரா’வும் கண்டுள்ளது. 2016–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 624 ரன்கள் குவித்தது ஓர் அணியின் அதிகபட்சமாகும். ஆஸ்திரேலிய அணி மூன்று முறை 600 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறது. 1932–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணி 36 ரன்னில் சுருண்டது குறைந்த ஸ்கோராகும்.

இந்திய அணி எப்படி?

இந்திய அணி மெல்போர்னில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2–ல் வெற்றியும், 8–ல் தோல்வியும், 2–ல் டிராவும் சந்தித்துள்ளது. 1978–ம் ஆண்டு பி‌ஷன்சிங் பெடி தலைமையில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது. 2–வது வெற்றி 1981–ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் தலைமையில் கிடைத்தது. இந்த டெஸ்டின் 2–வது இன்னிங்சில் சுனில் கவாஸ்கர் 70 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லீயின் பந்து வீச்சில் நடுவர் தவறான எல்.பி.டபிள்யூ. வழங்கினார். பேட்டின் உள்பகுதியில் உரசிக்கொண்டு காலுறையில் பட்ட பந்துக்கு நடுவர் விரலை உயர்த்தியதால், ஆத்திரமடைந்த கவாஸ்கர் களத்தை விட்டு நகர மறுத்தார். நடுவரிடமும் தனது கோபத்தை வெளிக்காட்டினார். சக வீரர்கள் சமாதானப்படுத்திய பிறகே கவாஸ்கர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 83 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. கபில்தேவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த நாள் வரைக்கும் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் மோசமான ஸ்கோர் இது தான்.

அசத்துமா கோலி அணி?

மெல்போர்னில் இந்திய அணி வெற்றி பெற்று 37 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்தியா மட்டுமல்ல 1981–ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஆசிய அணியும் இங்கு சாதித்ததில்லை. 2014–ம் ஆண்டில் இந்திய அணி டோனி தலைமையில் ஆடிய போது, விராட் கோலி, ரஹானேவின் சதங்களின் உதவியுடன் ‘டிரா’ செய்தது. இந்த மைதானத்தில் தெண்டுல்கர், ஷேவாக், கோலி உள்பட 8 இந்திய வீரர்கள் செஞ்சுரி அடித்துள்ளனர். ஆனால் எந்த இந்தியரும் இரட்டை சதம் அடித்ததில்லை. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 37 ஆண்டுகால ஏக்கத்தை தணிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

2017–ம் ஆண்டு டிசம்பரில் இங்கு நடந்த ஆஸ்திரேலியா–இங்கிலாந்து இடையிலான ஆ‌ஷஸ் டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்த டெஸ்டில் 24 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. அந்த போட்டிக்குரிய ஆடுகளம் மோசமாக இருந்தது என்று ஐ.சி.சி. தரப்பில் முத்திரை குத்தப்பட்டது. இதனால் இந்த முறை ஆடுகளத்தன்மையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இது வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் உயிரோட்டமான ஆடுகளமாக இருக்கும் என்று நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.