கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு வரும் போதே தோள்பட்டை வலி: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தகவல் + "||" + Indian batsman Ravindra Jadeja suffered injury Coach Ravi Shastri informed

ஆஸ்திரேலியாவுக்கு வரும் போதே தோள்பட்டை வலி: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு வரும் போதே தோள்பட்டை வலி: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் அவதி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தகவல்
அஸ்வின் காயத்தால் அவதிப்படும் நிலையில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள

மெல்போர்ன், 

அஸ்வின் காயத்தால் அவதிப்படும் நிலையில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்றது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு முறைகளை முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கியது தவறு என்று கூறிய அவர்கள், இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றதையும் சுட்டிக்காட்டினர்.

ரவிசாஸ்திரி பேட்டி

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) மெல்போர்னில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

அணித்தேர்வு தொடர்பான சலசலப்புகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு குறை சொல்வதும், விமர்சிப்பதும் எளிது. அவர்களின் கருத்துகள் மிக தொலைவில் இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இப்போது புவியின் தென்துருவத்தில் இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறோம் அவ்வளவு தான்.

ஜடேஜாவுக்கு காயம்

அஸ்வின் காயத்தில் சிக்கிய நிலையில் பெர்த் டெஸ்டில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அப்போது ரவீந்திர ஜடேஜா உடல்தகுதியுடன் இல்லை. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியா வந்து இறங்கியதும் 4 நாட்களுக்கு ஊசி போடப்பட்டது. இந்தியாவில் இருந்த போதே தோள்பட்டையில் கொஞ்சம் ‘பிடிப்பு’ இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். மருந்தினை ஊசி மூலம் உடலில் செலுத்தினாலும், காயம் சரியாவதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகி விட்டது.

பெர்த் டெஸ்டின் போது அவர் 70 முதல் 80 சதவீதம் வரை உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்ந்தோம். அதனால் அந்த டெஸ்டில் நாங்கள் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. ஆனால் இங்கு (மெல்போர்ன்) 80 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் கூட அவரை களம் இறக்குவோம்.

தொடக்க வீரர்கள் கவலை

கேப்டன் விராட் கோலியின் நடவடிக்கை, செயல்பாடு குறித்து ஆஸ்திரேலிய ஊடகத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள். விராட் கோலி அற்புதமான ஒரு வீரர். அவரின் நடத்தையில் என்ன தவறு இருக்கிறது?. என்னை பொறுத்தவரை அவர் உண்மையான ஒரு ஜென்டில்மேன்.

அணியில் தொடக்க வீரர்களின் ஆட்டம் (முரளிவிஜய் 4 இன்னிங்சில் 49 ரன், லோகேஷ் ராகுல் 48 ரன் மட்டுமே எடுத்துள்ளனர்) தான் மிகப்பெரிய கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. பொறுப்புணர்வுடன் விளையாட வேண்டியது தொடக்க வரிசை வீரர்களின் கடமையாகும். விஜயும், ராகுலும் கடந்த சில ஆண்டுகளாக நிறைய அனுபவம் பெற்று இருக்கிறார்கள். சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அஸ்வின்–அகர்வால்

அஸ்வினுக்கு ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமடையவில்லை. அவரது காயத்தன்மை குறித்து அடுத்த 48 மணி நேரத்திற்கு பிறகு மதிப்பீடு செய்வோம். காயத்தால் கடந்த டெஸ்டில் விளையாடாத ரோகித் சர்மா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார். அவரை பார்ப்பதற்கு நன்றாகத் தான் தெரிகிறார். நாளைய (இன்று) தினம் எப்படி பயிற்சியில் ஈடுபடுகிறார் என்பதை பார்க்க வேண்டும்.

மயங்க் அகர்வால், இளம் வீரர். இந்திய ‘ஏ’ அணிக்காக கணிசமாக ரன்கள் குவித்து இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. அவரை ஆடும் லெவன் அணியில் சேர்ப்பது குறித்து திங்கட்கிழமை (இன்று) தீர்மானிப்போம்.

ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இப்போது தான் அணியுடன் இணைந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்ட பிறகு அவர் ஒரே ஒரு முதல்தர போட்டியில் மட்டுமே ஆடியிருக்கிறார். அதனால் அவரை இந்த டெஸ்டில் சேர்ப்பதா அல்லது வேண்டாமா? என்பதை மிகவும் கவனமுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது.

உத்வேகத்தை இழக்கவில்லை

பெர்த் டெஸ்ட் தோல்வியால் நாங்கள் உத்வேகத்தையோ, நம்பிக்கையையோ இழந்து விடவில்லை. தற்போது தொடரில் நாங்கள் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளோம். வெளிநாட்டு மண்ணில் இவ்வாறு 1–1 என்ற கணக்கில் நாம் வகிப்பது அரிதான ஒன்று. இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளன. தங்களது திறமை என்ன? களத்தில் என்ன செய்ய முடியும் என்பதை வீரர்கள் நன்கு அறிவர். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை பறிகொடுத்த நிலையில், 3–வது முறையாக நிச்சயம் நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் இருந்து கிளம்பும் போதே காயத்தில் தான் இருந்தார் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வெளிப்படுத்திய தகவல் புதுவித சர்ச்சையை கிளப்பியுள்ளது. காயமடைந்த வீரரை முக்கியமான இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுவினர் எப்படி தேர்வு செய்தார்கள்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

3–வது டெஸ்டில் பிஞ்ச் ஆடுவாரா?

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், 2–வது டெஸ்டின் போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி வீசிய பந்து தாக்கியதில் வலது கை ஆள்காட்டி விரலில் காயமடைந்தார். வலியால் துடித்த அவருக்கு உடனடியாக ‘ஸ்கேன்’ பரிசோதனை எடுத்து பார்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக காயம் பெரிய அளவில் இல்லை என்பது தெரியவந்தது. 3–வது டெஸ்டுக்கு தயாராகி வரும் ஆரோன் பிஞ்ச் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பந்து தாக்கியதும் வலி பயங்கரமாக இருந்தது. விரலில் எலும்பு முறிவு போன்று பெரிய அளவில் ஏதோ நடந்து விட்டது என்று தான் நினைத்தேன். நல்ல வேளையாக அது மாதிரி எதுவும் இல்லை. கடந்த இரண்டு நாட்களில் 100 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக உணர்கிறேன். இதே விரலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வைத்து எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த மாதம் பயிற்சியின் போது மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தும் சில முறை தாக்கியது. மெல்போர்ன் டெஸ்டில் களம் காணுவதில் உறுதியுடன் இருக்கிறேன். ‘ஸ்லிப்’ பகுதியில் நின்று கேட்ச் செய்யும் பயிற்சியை தொடங்கி விட்டேன்.’ என்றார்.