இமாச்சலபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி போராட்டம்


இமாச்சலபிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2018 10:00 PM GMT (Updated: 24 Dec 2018 7:00 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் தொடரில், இமாச்சலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி போராடி வருகிறது.

தர்மசாலா,

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - இமாச்சலபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இமாச்சலபிரதேச அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இமாச்சலபிரதேச அணி 463 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக அங்கித் கல்சி 144 ரன்களும், ரிஷி தவான் 75 ரன்களும் எடுத்தனர். தமிழகம் தரப்பில் டி.நடராஜன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 236 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்றைய முடிவில் 57 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்துள்ளது. அபினவ் முகுந்த் 111 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே தமிழக அணிக்கு இன்னும் 58 ரன்கள் தேவைப்படுகிறது. அதனால் இந்த ஆட்டத்தை ‘டிரா’ செய்ய கடைசி நாளான இன்று தமிழக அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும்.

டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்து இந்த சீசனில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது. டெல்லி சுழற்பந்து வீச்சாளர் விகாஸ் மிஷ்ரா இரு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.


Next Story