‘பாகிஸ்தான் ஒரு நாள் தொடருக்கு சுமித், வார்னர் திரும்புவார்கள்’ - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தகவல்


‘பாகிஸ்தான் ஒரு நாள் தொடருக்கு சுமித், வார்னர் திரும்புவார்கள்’ - ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2018 10:45 PM GMT (Updated: 24 Dec 2018 7:21 PM GMT)

பாகிஸ்தான் ஒரு நாள் தொடருக்கு சுமித், வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

மெல்போர்ன் ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகளங்கள் எப்போதும் முக்கியமான ஒன்றாகும். எது சிறந்த ஆடுகளங்கள் என்றால் பேட்டுக்கும், பந்துக்கும் சரிசம போட்டி கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான் டெஸ்ட் கிரிக்கெட்டும் மங்கி போகாமல் நிலைத்து நிற்கும். வெறும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் நாம் விளையாடினால், அதன் பிறகு போட்டி உப்பு-சப்பின்றி ஆகி விடும். மெல்போர்ன் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன். அது தான் இந்த தொடருக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டுக்கும் நல்லது.

எங்களது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் விக்கெட்டை இதுவரை 7 முறை வீழ்த்தி இருக்கிறார். இந்த தொடர் நிறைவடையும் போது அந்த எண்ணிக்கை 11 ஆக உயரும் என்று நம்புகிறேன். விராட் கோலி சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் நாதன் லயன், உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து வரும் எங்கள் வீரர்கள் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு (மார்ச் கடைசியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நடக்கிறது) திரும்புவதற்கு நல்ல வாய்ப்புள்ளது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும், தனிப்பட்ட முறையில் அவர்களுக்கும் எது சிறந்ததோ அதன்படி செயல்படுவோம். ஆனால் இப்போதைக்கு எந்த உறுதியான முடிவும் எடுக்கவில்லை.

ஸ்டீவன் சுமித்துக்கு இது கடினமான காலக்கட்டம். அவர் அணிக்கு எப்போது திரும்புவார் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம். அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விராட் கோலி ஆவார். அது தான் உண்மை. அற்புதமான ஒரு இளம் வீரர். எங்களது கேப்டன். அணிக்குள் மறுபடியும் அடியெடுத்து வைக்கும் மனஉறுதியுடன் இருப்பதாக அறிகிறேன். அவரது ஆவல், எனக்குள் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

இவ்வாறு லாங்கர் கூறினார்.


Next Story