‘3-வது டெஸ்டில் சதம் அடிப்பேன்’ - இந்திய துணை கேப்டன் ரஹானே நம்பிக்கை


‘3-வது டெஸ்டில் சதம் அடிப்பேன்’ - இந்திய துணை கேப்டன் ரஹானே நம்பிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2018 11:15 PM GMT (Updated: 24 Dec 2018 7:37 PM GMT)

‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் சதம் அடிப்பேன்’ என்று இந்திய துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அணியின் பேட்டிங் குறித்து விவாதிக்கும் போது, இது தான் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் விளையாடும் போது நமது பந்து வீச்சாளர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் (இரண்டு இன்னிங்சையும் சேர்த்து) வீழ்த்தி விடுகிறார்கள். தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்தே இதை பார்க்கிறோம். எனவே பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன்கள் குவித்து, பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருந்தால் சாதகமான முடிவு கிடைக்கும். போட்டியில் ஒவ்வொரு பகுதியிலும் (செஷன்) சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும். ஏனெனில் ஒரு பகுதியில் ஆட்டத்தின் போக்கே மாறி விடும். எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கில் நன்றாக செயல்பட வேண்டியது அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் பொறுப்புணர்வுடன் ஆடுவார்கள் என்று நம்புகிறேன்.

மெல்போர்னில், ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மிகப்பெரிய மைதானத்தில் மிகப்பெரிய போட்டியில் ஆடப்போகிறோம் என்பதை அறிவோம். அதுவும் 1-1 என்ற சமநிலையில் இங்கு வந்திருப்பது உற்சாகம் தரும் விஷயமாகும். பெர்த் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அது முடிந்து போன கதை. தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியம்.

வேகமும், ஆக்ரோஷமும் நிறைந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது எங்களுக்கு நல்லதாகவே பட்டது. இது 3-வது டெஸ்ட் போட்டியை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.

மெல்போர்னில், நிச்சயம் நான் சதம் அடிப்பேன் என்று நினைக்கிறேன். அடிலெய்டு மற்றும் பெர்த்தில் நான் பேட்டிங் செய்த விதம், அதிரடியாக ஆடும் மனநிலையுடன் செயல்பட்ட விதம் இவற்றை வைத்து பார்க்கும் போது, இந்த டெஸ்டில் சதமோ அல்லது இரட்டை சதம் கூட வரலாம். ஆனால் இதை பற்றி சிந்திக்காமல் ஆடுவதே அதை விட முக்கியமானதாகும். முந்தைய டெஸ்ட் போட்டிகளில் எப்படி பேட்டிங் செய்தேனோ அதையே இங்கும் தொடர வேண்டும். சூழ்நிலையை நன்கு கணித்து அதற்கு தகுந்தபடி விளையாடும் போது அது அணிக்கு கூடுதல் அனுகூலமாக அமையும்.

அஸ்வினின் உடல்தகுதி குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். ரோகித் சர்மா உடல்தகுதியை எட்டி விட்டார் போன்றே தோன்றுகிறது. நேற்று அவர் பயிற்சியில் ஈடுபட்டார். நாளை (இன்று) வலை பயிற்சி முடிந்த பிறகு அணி தேர்வு குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு ரஹானே கூறினார்.

30 வயதான ரஹானே இந்த தொடரில் இதுவரை 2 அரைசதங்கள் உள்பட 164 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இலங்கைக்கு எதிராக 132 ரன்கள் எடுத்த பிறகு ரஹானே எந்த சதமும் அடிக்கவில்லை. 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த டெஸ்டில் ரஹானே சதம் விளாசியது நினைவு கூரத்தக்கது.


Next Story