கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனிக்கு மீண்டும் இடம் + "||" + Against New Zealand series: Dhoni has been back in the Indian team for over 20 matches

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனிக்கு மீண்டும் இடம்

நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் டோனிக்கு மீண்டும் இடம்
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் டோனிக்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த மூன்று ஆட்டங்கள் சிட்னி (ஜனவரி 12-ந்தேதி), அடிலெய்டு (ஜன.15), மெல்போர்ன் (ஜன.18) ஆகிய நகரங்களில் நடக்கிறது.


அதைத் தொடர்ந்து இந்திய அணி அங்கிருந்து நியூசிலாந்துக்கு சென்று 5 ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 23-ந்தேதி நேப்பியரில் நடக்கிறது. இந்திய அணியின் நியூசிலாந்து பயணம் பிப்ரவரி 10-ந்தேதி நிறைவடைகிறது.

இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான 37 வயதான டோனி அணிக்கு திரும்புகிறார். இதே போல் காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் அழைக்கப்பட்டுள்ளார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ஒரு நாள் போட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் டோனி கழற்றி விடப்பட்ட போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது வாழ்க்கை முடிந்து விட்டதாக பேசப்பட்டது. 20 ஓவர் வடிவிலான போட்டியில் ரிஷாப் பான்ட் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்கவே டோனி ஒதுங்கியதாக கேப்டன் விராட் கோலி அந்த சமயத்தில் விளக்கம் அளித்தார். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான அணிக்கும் டோனி தேர்வாகி இருக்கிறார். ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வெளிநாட்டில் 8 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. ஆனால் தேர்வாளர்கள் உலக கோப்பைக்கு முன்பாக டோனிக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விரும்பினர். அதன் காரணமாகவே 20 ஓவர் அணிக்கும் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் ஒரு மாதத்தில் டோனி 11 சர்வதேச போட்டிகளில் ஆடுவார்’ என்று குறிப்பிட்டார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிந்ததும் தாயகம் திரும்பும் ரிஷாப் பான்ட், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது.

தற்போதைய அணித்தேர்வை வைத்து பார்க்கும் போது, 2019-ம் ஆண்டு மே 30-ந்தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆகியோருக்கு இடம் கிடைக்காது என்பது வெளிப்படையாக தெரிகிறது.