ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி - கால்இறுதி வாய்ப்பை இழந்தது


ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தோல்வி - கால்இறுதி வாய்ப்பை இழந்தது
x
தினத்தந்தி 25 Dec 2018 10:45 PM GMT (Updated: 25 Dec 2018 7:15 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் தொடரில், தமிழக அணி அடைந்த தோல்வியினால் கால்இறுதி வாய்ப்பை இழந்தது.

தர்மசாலா,

ரஞ்சி கிரிக்கெட்டில் இமாச்சலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி அடைந்து கால்இறுதி வாய்ப்பை இழந்தது. அபினவ் முகுந்த், பாபா இந்திரஜித் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - இமாச்சலபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (‘பி’ பிரிவு) தர்மசாலாவில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் முறையே தமிழ்நாடு 227 ரன்களும், இமாச்சலபிரதேசம் 463 ரன்களும் எடுத்தன. 236 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்திருந்தது. அபினவ் முகுந்த் (111 ரன்), கேப்டன் பாபா இந்திரஜித் (36 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முகுந்த் 128 ரன்களில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த விஜய் சங்கர் நிலைத்து நின்று ஆடினார். அவரது ஒத்துழைப்புடன் பாபா இந்திரஜித் சதத்தை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் தமிழக அணி 3 விக்கெட்டுக்கு 312 ரன்களுடன் வலுவான நிலையில் காணப்பட்டதால், ஆட்டம் ‘டிரா’வில் முடிவதற்கான வாய்ப்பு தென்பட்டது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. விஜய் சங்கர் 56 ரன்களிலும், பாபா இந்திரஜித் 106 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். முடிவில் தமிழக அணி 2-வது இன்னிங்சில் 118.3 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இமாச்சலபிரதேச அணிக்கு 110 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக ஆடிய இமாச்சலபிரதேச அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் அங்குஷ் பெய்ன்ஸ் 38 பந்துகளில் 64 ரன்கள் (6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். இந்த சீசனில் இமாச்சலபிரதேச அணி ருசித்த 3-வது வெற்றி இதுவாகும்.

தமிழக அணி 7 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி, 4 டிரா என்று 12 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் பின்தங்கியுள்ளது. இன்னும் ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. முன்னதாக ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் தமிழக அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை அபினவ் முகுந்த் (6,654 ரன்) படைத்தார். இது மட்டுமே தமிழக அணிக்கு கிடைத்த ஆறுதலான விஷயமாகும்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த மும்பை-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான பரபரப்பான ஆட்டம் (‘ஏ’ பிரிவு) ‘டிரா’வில் முடிந்தது. இதில் 74 ஓவர்களில் 285 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி இலக்கை வெகுவாக நெருங்கியது. 62 ஓவர் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட் சரிய தடுமாற்றத்திற்குள்ளானது. அந்த அணி 71.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்த போது இரு அணிகளின் கேப்டன்களும் போட்டியை ‘டிரா’வில் முடிக்க ஒப்புக் கொண்டனர். இருப்பினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பைக்கு 3 புள்ளிகளும், சவுராஷ்டிராவுக்கு ஒரு புள்ளியும் கிடைத்தன.


Next Story