தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்


தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:00 PM GMT (Updated: 25 Dec 2018 7:27 PM GMT)

தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் இன்று தொடங்க உள்ளது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்க அணி சொந்த மண்ணில் எப்போதும் வலுவானது. கேப்டன் பிளிஸ்சிஸ், மார்க்ராம், அம்லா, டீன் எல்கர், குயின்டான் டிகாக் என்று தரமான பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். பந்து வீச்சில் ஸ்டெயின், ரபடா, கேஷவ் மகராஜ் மிரட்டுவார்கள். காயம் காரணமாக பிலாண்டர், நிகிடி இடம் பெறவில்லை. ஸ்டெயின் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், தென்ஆப்பிரிக்க வீரர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை ஷான் பொல்லாக்கிடம் (421 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்து விடுவார். அந்த சாதனையை இந்த டெஸ்டில் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பஹார் ஜமான், இமாம் உல்-ஹக், அசார் அலி, ஹாரிஸ் சோகைல், பாபர் அசாம் ஆகியோரும், பந்து வீச்சில் யாசிர் ஷா, ஹசன் அலி, ஷகீன் அப்ரிடி உள்ளிட்டோரும் நல்ல நிலையில் உள்ளனர். தோள்பட்டை காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் இந்த போட்டியில் ஆடவில்லை. பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘எங்களது சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 33 டெஸ்டுகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில் தரமான ‘லெக் ஸ்பின்னர்ஸ்’களை தென்ஆப்பிரிக்க அணி சந்தித்தது இல்லை என்பது அறிவோம். அந்த வகையில் யாசிர் ஷா எங்களிடம் இருப்பது சாதகமான அம்சமாக இருக்கும். அவரது பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார். தென்ஆப்பிரிக்க மண்ணில் பாகிஸ்தான் அணி இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடி அதில் 2-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story