3-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடக்கம்: இந்திய அணியில் விஜய், ராகுல் நீக்கம் - அறிமுக வீரராக இறங்குகிறார், அகர்வால்


3-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடக்கம்: இந்திய அணியில் விஜய், ராகுல் நீக்கம் - அறிமுக வீரராக இறங்குகிறார், அகர்வால்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:30 PM GMT (Updated: 25 Dec 2018 7:49 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் இன்று தொடங்கும் 3-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் முரளிவிஜய், ராகுல் நீக்கப்பட்டனர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் ஆரம்பிக்கும் இந்த போட்டிக்கான இந்திய லெவன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி முதல் இரு டெஸ்டுகளில் சோடை போன தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜய் (4 இன்னிங்சில் 49 ரன்), லோகேஷ் ராகுல் (48 ரன்) இருவரும் அதிரடியாக கழற்றி விடப்பட்டனர். புதுமுக வீரர் மயங்க் அகர்வால் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்கிறார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 27 வயதான மயங்க் அகர்வால், முதல்தர கிரிக்கெட்டிலும், இந்திய ‘ஏ’ அணிக்காகவும் நிறைய ரன்கள் குவித்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 46 ஆட்டங்களில் விளையாடி ஒரு முச்சதம் உள்பட 3,599 ரன்களும், சர்வதேச அந்தஸ்து அல்லாத ஒரு நாள் போட்டிகளில் 12 சதங்கள் உள்பட 3,605 ரன்களும் (75 ஆட்டம்) எடுத்துள்ளார்.

முன்னணி தொடக்க வீரர்கள் நீக்கம், மற்றொரு தொடக்க வீரர் பிரித்வி ஷா காயத்தால் வெளியேற்றம் என்று ஒரு இக்கட்டான சூழலில் அதுவும் ஆஸ்திரேலிய பயணத்தில், சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவது என்பது எளிதான விஷயம் அல்ல. அவருடன் கைகோர்த்து ஹனுமா விஹாரி தொடக்க வீரராக இறங்குகிறார். விஹாரி இதுவரை 2 டெஸ்டில் மட்டுமே விளையாடி உள்ளார். அனுபவம் இல்லாத தொடக்க ஜோடி, ஆஸ்திரேலியாவின் தாக்குதலை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

முதுகுவலியால் முந்தைய டெஸ்டில் ஆடாத ரோகித் சர்மா அணிக்கு திரும்புகிறார். அஸ்வின் உடல்தகுதியுடன் இல்லாததால் அவரது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுகிறார். சில தினங்களுக்கு முன்பு அணியுடன் இணைந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறுகையில், ‘பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் நிலைத்து நின்று ஆட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நமது பந்து வீச்சு உண்மையிலேயே சிறப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது. பேட்ஸ்மேன்கள் போதிய ரன்கள் குவிக்காவிட்டால், பந்து வீச்சாளர்களால் எதுவும் செய்ய இயலாது. 2-வது பேட்டிங் செய்யும் போது, எதிரணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை முந்த முயற்சிக்க வேண்டும் அல்லது முடிந்த அளவுக்கு நெருங்கி விட வேண்டும். எதிரணிக்கு நிகராக பெரிய ஸ்கோரை எட்டும் போது, 2-வது இன்னிங்ஸ் ஆட்டம் முக்கியத்துவமும், கடும் சவாலும் நிறைந்ததாகி விடும். அதே சமயம் முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலை கண்டால், இது போன்ற நெருக்கடியை தவிர்த்து விட முடியும்.

பேட்ஸ்மேன்கள் அனைவரும் கட்டாயம் ஒருங்கிணைந்து ஆட வேண்டும். குறிப்பிட்ட சில வீரர்கள் இதை செய்ய வேண்டும் அல்லது இதை செய்யக்கூடாது என்று சொல்லமாட்டேன். ஆனால் ஒரு பேட்டிங் குழுவாக, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பாக்சிங் டே டெஸ்டில் முதல் நாள், மிகவும் எதிர்பார்ப்புக்குரிய நாளாக இருக்கும். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு முன்பு இரண்டு முறை இந்த அனுபவத்தை சந்தித்து இருக்கிறேன்’ என்றார். இந்த டெஸ்டில் கோலி சதம் விளாசினால், ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

துவண்டு போன ஆஸ்திரேலிய அணி 2-வது டெஸ்ட் வெற்றியால் உற்சாகமடைந்துள்ளது. அதே உத்வேகத்துடன் 3-வது டெஸ்டிலும் அந்த அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுவார்கள். அந்த அணியில் ஒரே ஒரு மாற்றமாக பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் நீக்கப்பட்டு, ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டு உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இதுவரை 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த டெஸ்டிலும் அவர்களது துருப்பு சீட்டாக நாதன் லயன் தான் இருப்பார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தற்போது நாங்கள் உச்சபட்ச நிலையில் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று உணருகிறோம். அனுபவம் இல்லாத அணியை கொண்டு பெர்த் டெஸ்டில் வெற்றி பெற்றது அதுவும் ‘நம்பர் ஒன்’ அணியை வீழ்த்தியதன் மூலம் எங்களது நம்பிக்கை கொஞ்சம் அதிகரித்துள்ளது.

இது நீண்ட தொடர். எங்களது பவுலர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. அதை சற்று குறைக்கும் வகையில் மிட்செல் மார்சை அணியில் சேர்த்து இருக்கிறோம்’ என்றார்.

மெல்போர்னில் இந்திய அணி இதுவரை 12 டெஸ்டில் விளையாடி அதில் 2-ல் வெற்றியும் (1977-ம் ஆண்டு மற்றும் 1981-ம் ஆண்டு) 8-ல் தோல்வியும், 2-ல் டிராவும் கண்டுள்ளது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இங்கு சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என்று தெரிகிறது. 2-வது மற்றும் 3-வது நாளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால், ஆடுகளத்தில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சு எடுபடலாம். டெஸ்ட் போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, ரிஷாப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘விமர்சனங்களை பற்றி கவலையில்லை’-கோலி

இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கும், இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சர்ச்சையை கிளப்பியது. கோலியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இது குறித்து விராட் கோலியிடம் நேற்று கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:-

நீங்கள் என்னை விரும்ப வேண்டும் என்பதற்காக, நான் என்ன செய்கிறேன் அல்லது எப்படி நினைக்கிறேன் என்பதை வெளிப்படுத்த கையில் பேனரை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல முடியாது. எதன் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதை நான் கட்டுப்படுத்த முடியாது. எனது கவனம் எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் மீதும், போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. என்னை பற்றி மற்றவர்கள் என்ன எழுதுகிறார்கள், எந்த மாதிரி கருத்து சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொருவருக்கும் தங்களது கோணத்தில் கருத்தை சொல்ல உரிமை உண்டு. அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன். அதே சமயம் என்னுடைய நோக்கம், சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் என்னை வில்லனாக சித்தரித்தாலும் அது பற்றி எனக்கு கவலையில்லை. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி (கோலியை ஜென்டில்மேன் என்று வர்ணித்தார்) என்னுடன் அதிக நேரத்தை செலவிடுவதால் நான் எந்த மாதிரி நபர் என்பது அவருக்கு நன்கு தெரியும். என்னை பற்றி தெரிந்தவர்களிடம் என்னை பற்றி கேளுங்கள்.

எனக்கும், டிம் பெய்னுக்கும் களத்தில் நடந்த மோதல் முடிந்து போன கதை. டெஸ்ட் கிரிக்கெட்டில் உயர்ந்த நிலையில், இரு கடினமான அணிகள் சந்திக்கும் போது இது போன்று நடக்கத்தான் செய்யும். அதை விட்டு நகர்ந்து, அடுத்த போட்டி மீது கவனம் செலுத்துவதே முக்கியம். இவ்வாறு கோலி கூறினார்.


Next Story