கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் 181 ரன்னில் சுருண்டது - ஸ்டெயின் புதிய சாதனை + "||" + First Test against South Africa: Pakistan 181 runs - Stain new record

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் 181 ரன்னில் சுருண்டது - ஸ்டெயின் புதிய சாதனை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் 181 ரன்னில் சுருண்டது - ஸ்டெயின் புதிய சாதனை
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் புதிய சாதனை படைத்தார்.
செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. 96 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய அந்த அணியில் பாபர் அசாம் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவர் பின்வரிசை வீரர்களின் துணையுடன் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டார். அவர் தனது பங்குக்கு 71 ரன்கள் (79 பந்து, 15 பவுண்டரி) எடுத்த நிலையில் கேட்ச் ஆனார்.


முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 47 ஓவர்களில் 181 ரன்களில் அடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் டுன்னே ஆலிவர் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ரபடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஸ்டெயின் சாதனை

மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஸ்டெயின் ஒரு விக்கெட் எடுத்தார். அது சாதனை விக்கெட்டாக அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டெயினின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 422 ஆக (89 டெஸ்ட்) உயர்ந்தது. அவர், தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ஷான் பொல்லாக்கிடம் (421 விக்கெட், 108 டெஸ்ட்) இருந்து தட்டிப்பறித்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். மார்க்ராம் (12 ரன்), அம்லா (8 ரன்), டீன் எல்கர் (22 ரன்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (0), டி புருன் (29 ரன்) ஆகியோர் சீக்கிரமாக வெளியேற்றப்பட்டனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 36 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. பவுமா (38 ரன்), ஸ்டெயின் (13 ரன்) களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.