மெல்போர்னில் 3-வது டெஸ்ட் தொடங்கியது: இந்திய அணி நிதான ஆட்டம் - அகர்வால், புஜாரா அரைசதம் அடித்தனர்


மெல்போர்னில் 3-வது டெஸ்ட் தொடங்கியது: இந்திய அணி நிதான ஆட்டம் - அகர்வால், புஜாரா அரைசதம் அடித்தனர்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:30 PM GMT (Updated: 26 Dec 2018 8:04 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் நிதானமாக ஆடிய இந்திய அணி தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புதுமுக வீரர் மயங்க் அகர்வால், புஜாரா அரைசதம் அடித்தனர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்ற நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்ட் போட்டியை காண 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். மூத்த வீரர்கள் முரளிவிஜய், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹனுமா விஹாரியும், புதுமுக வீரர் மயங்க் அகர்வாலும் களம் புகுந்தனர். இந்த ஆண்டில் இந்தியாவின் 6-வது தொடக்க ஜோடியான இவர்கள் ‘ரன் வராவிட்டாலும் பரவாயில்லை; விக்கெட்டை சுலபமாக இழந்து விடக் கூடாது’ என்ற நோக்குடன் பொறுமையை கடைபிடித்தனர். நிறைய பந்துகளை தொடவில்லை.

ஆஸ்திரேலிய பவுலர்கள் தீவிரமாக தாக்குதல் தொடுத்த போதிலும், முந்தைய போட்டிக்குரிய ஆடுகளங்கள் போல் மெல்போர்னில் அதிவேகம் இல்லை. ஆடுகளத்தன்மை கொஞ்சம் மெதுவாக, பேட்ஸ்மேன்களுக்கு உகந்த வகையிலேயே காணப்பட்டது. மயங்க் அகர்வால் கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே சமயம் ஹனுமா விஹாரி முதல் ரன்னை 25-வது பந்தில் தான் எடுத்தார். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. ரன்ரேட் 2-க்கும் கீழாகவே சென்றது.

சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்து வீச்சை, மயங்க் அகர்வால் கிரீசை விட்டு சில அடி தூரம் இறங்கி வந்து அடித்து அவரது நம்பிக்கையை சீர்குலைத்தார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர். கம்மின்ஸ் ஓவரில் ஒரு பந்து விஹாரியின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. இன்னொரு பந்து அகர்வாலின் தோள்பட்டையை தாக்கியது. முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கம்மின்ஸ், ஷாட்பிட்ச்சாக வீசிய பந்து எழும்பி வரும் என்று நினைத்து விஹாரி (8 ரன், 66 பந்து) அதை தவிர்க்க குனிந்தார். ஆனால் பந்து அவரது கையுறையில் பட்டு எகிறி அருகில் நின்ற ஆரோன் பிஞ்சிடம் கேட்ச்சாக விழுந்தது. அகர்வால்-விஹாரி ஜோடியினர் மொத்தம் 18.5 ஓவர்கள் சமாளித்தனர். 2010-ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்திய தொடக்க ஜோடி அதிக ஓவர்களை சந்தித்த ஆட்டம் இது தான்.

அடுத்து புஜாரா வந்தார். நிலைத்து நின்று ஆடிய அகர்வால் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதன் பிறகு லயனின் பந்து வீச்சில் பிரமாதமான ஒரு சிக்சரை பறக்கவிட்டார். அறிமுக டெஸ்டிலேயே அனைவரும் கவரும் வகையில் ஆடிய அகர்வால் தேனீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கம்மின்ஸ் லெக்- சைடில் ஷாட்பிட்சாக வீசிய பந்து அவரது கையுறையை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் சிக்கியது. அகர்வால் 76 ரன்களுடன் (161 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து கேப்டன் விராட் கோலி நுழைந்தார். முதலில், துரிதமாக ஆடிய கோலி 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு அவரும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். மறுமுனையில் புஜாரா அரைசதத்தை கடந்தார்.

83-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் புதிய பந்தை எடுத்தனர். அதன் பிறகு பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆனது. மிட்செல் ஸ்டார்க் 150 கிலோ மீட்டர் வேகம் வரை பந்து வீசி, விராட் கோலியை திணறடித்தார். அவரது பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் தடுமாறிய கோலி 47 ரன்களில் ஆட்டம் இழந்திருக்க வேண்டியது. அவரது பந்து வீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கோட்டை விட்டார். கடைசி 24 பந்துகளில் கோலி ரன்னே எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் (ரன்ரேட் 2.41) எடுத்துள்ளது. புஜாரா 68 ரன்களுடனும் (200 பந்து, 6 பவுண்டரி), விராட் கோலி 47 ரன்களுடனும் (107 பந்து, 6 பவுண்டரி) களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் மொத்தம் 25 ஓவர்கள் மெய்டன்களாக வீசப்பட்டன.

இன்றைய 2-வது நாளில் முதல் பகுதி முக்கியமானது. அதில் இந்திய வீரர்கள் தாக்குப்பிடித்து விட்டால் வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து மயங்க் அகர்வால் சாதனை

இந்த டெஸ்டில் இந்திய அணியில் மயங்க் அகர்வால் அறிமுக வீரராக இடம் பிடித்தார். இந்திய அணியின் 295-வது டெஸ்ட் வீரர் ஆவார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 27 வயதான மயங்க் அகர்வால் தனது முதலாவது போட்டியிலேயே 76 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய அறிமுக வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு 1947-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் டட்டு பட்கர் 51 ரன்கள் எடுத்ததே ஆஸ்திரேலியாவில் இந்திய அறிமுக வீரரின் அதிகபட்சமாக இருந்தது.

முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு மயங்க் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில், ‘டெஸ்ட் போட்டி அறிமுகத்திற்குரிய தொப்பியை வாங்கிய போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்வாக இது இருக்கும். உணர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு, ஆட்டத்தில் முழுமையாக கவனம் செலுத்துவது எளிதான விஷயம் அல்ல. எனக்குள் திட்டம் வகுத்து அதன்படி செயல்பட்டேன். நான் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளித்தது. இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது மாதிரி நடக்கவில்லை. ஆடுகளத்தன்மையை பொறுத்தமட்டில், தொடக்கத்தில் மெதுவான தன்மையுடன் காணப்பட்டது. போக போக அதாவது மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சற்று வேகமாக இருந்தது. ஆடுகளம் குறித்து நான் அதிகமாக சிந்தித்து கொண்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். ரன் அடிக்க ஏதுவான பந்துகளை அதிகமாக வீசவில்லை. துல்லியமாக வீசி நெருக்கடி கொடுத்தனர். நாங்களும் நன்றாக ஆடியதாகவே நினைக்கிறேன்’ என்றார்.

மிட்செல் மார்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் ரசிகர்கள்

இந்த டெஸ்டில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்சுக்கு எதிராக அந்த நாட்டு ரசிகர்கள் இரண்டு முறை கேலி செய்து குரல் எழுப்பினர். உள்ளூர் மாகாண (விக்டோரியா) வீரர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தான் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார். ஹேன்ட்ஸ்கோம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர். ரசிகர்களின் செயல் ஏமாற்றம் அளிப்பதாக சக வீரர் டிராவிஸ் ஹெட் கூறினார்.



Next Story