பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 149 ரன்கள் இலக்கு


பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 149 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 27 Dec 2018 10:30 PM GMT (Updated: 27 Dec 2018 8:14 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 181 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பவுமா 53 ரன்களும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 45 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், ஷகீன் ஷா அப்ரிடி தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 42 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் பஹார் ஜமான் 12 ரன்னில் கேட்ச் ஆனாலும், இமாம் உல்-ஹக்கும், ஷான் மசூட்டும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒரு விக்கெட்டுக்கு 101 ரன்களுடன் நல்ல நிலைமையில் இருந்த அந்த அணிக்கு, வேகப்பந்து வீச்சாளர் டுன்னே ஆலிவர் ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் இமாம் உல்-ஹக் 57 ரன்களில் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) போல்டு ஆனார். அதன் பிறகு ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் யாரும் சோபிக்கவில்லை. கடைசி வரை போராடிய ஷான் மசூட் 65 ரன்களில் வீழ்ந்தார்.

முடிவில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 56 ஓவர்களில் 190 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 2-வது நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டுன்னே ஆலிவர், இந்த இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ரபடா 3 விக்கெட்டுகளும், ஸ்டெயின் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

முதல் நாள் போன்றே 2-வது நாளிலும் 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 149 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. எளிய இலக்கு என்பதால் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story