தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தோல்வி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தோல்வி
x
தினத்தந்தி 28 Dec 2018 10:45 PM GMT (Updated: 28 Dec 2018 7:15 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 3-வது நாளிலேயே தோல்வி அடைந்தது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 181 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் எடுத்தன. 42 ரன்கள் பின்தங்கிய பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 190 ரன்னில் அடங்கியது.

இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 149 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சிறிய இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாளான நேற்று பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் டக்-அவுட் ஆனாலும், டீன் எல்கரும், அம்லாவும் கைகோர்த்து சரிவை சமாளித்தனர். 6-வது ஓவரில் தான் இவர்கள் ரன் கணக்கை தொடங்கினர். அதன் பிறகு அணியை தூக்கி நிறுத்திய இவர்கள் 2-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் திரட்டினர். டீன் எல்கர் 50 ரன்னிலும், அடுத்து வந்த டி புருன் 10 ரன்னிலும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.

மறுமுனையில் அம்லா நிலைத்து நின்று ஆடி வெற்றியை உறுதி செய்தார். தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 50.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அம்லா 63 ரன்களுடனும் (148 பந்து, 11 பவுண்டரி), பவுமா 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டுன்னே ஆலிவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.


Next Story