மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா 346 ரன்கள் முன்னிலை: பும்ராவின் வேகத்தில் சிதறியது ஆஸ்திரேலியா - 151 ரன்னில் ஆல்-அவுட்


மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா 346 ரன்கள் முன்னிலை: பும்ராவின் வேகத்தில் சிதறியது ஆஸ்திரேலியா - 151 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 28 Dec 2018 11:30 PM GMT (Updated: 28 Dec 2018 7:56 PM GMT)

மெல்போர்னில் நடந்து வரும் 3-வது டெஸ்டில் இந்திய பந்து வீச்சாளர் பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா திணறடித்தார். ஆடுகளத்தில் பந்து சீரற்ற முறையில் ‘பவுன்ஸ்’ ஆனதால் பேட்ஸ்மேன்கள் துல்லியமாக கணிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 8 ரன்னில், இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் 22 ரன்னில், பும்ரா வீசிய பவுன்சரை தட்டிவிட்ட போது எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். யார்க்கர், ஸ்விங், ஷாட்பிட்ச், வேகத்தை குறைத்து வீசுவது என்று பும்ரா பந்து வீச்சில் காட்டிய வித்தியாசங்கள் ஆஸ்திரேலிய வீரர்களை நிலைகுலைய வைத்தது. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஷான் மார்ஷ் (19 ரன், 61 பந்து), பும்ரா யார்க்கராக வேகம் குறைத்து வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதற்கிடையே, அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்படும் உஸ்மான் கவாஜா (21 ரன்) ஜடேஜாவின் சுழலில் சிக்கினார். கேப்டன் டிம் பெய்ன் 22 ரன்னில், பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் ஆனார். எந்த ஒரு வீரரும் 25 ரன்களை கூட தொடவில்லை. இதனால் பாலோ- ஆன் தவிர்ப்பு ஸ்கோரான 244 ரன்களை அவர்களால் நெருங்க முடியவில்லை.

முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பும்ரா 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ-ஆன் வழங்கவில்லை. ஒரு வேளை கடைசி நாளில் பேட்டிங் செய்யும் நிலை ஏற்பட்டால் சேசிங் செய்வது மிகவும் கடினம் என்று கருதிய இந்திய அணி நிர்வாகம் 292 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடுவது என்று முடிவு செய்தது.

ஆனால் 2-வது இன்னிங்ஸ் இந்தியாவுக்கு திருப்திகரமாக அமையவில்லை. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மிரட்டினார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஹனுமா விஹாரியும், மயங்க் அகர்வாலும் முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் (13 ஓவர்) எடுத்த நிலையில் பிரிந்தனர். விஹாரி (13 ரன்) ஷாட்பிட்ச் பந்தை தடுத்து ஆட முற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த முதல் இன்னிங்சின் ‘ஹீரோ’ புஜாரா (0) கம்மின்ஸ் பந்து வீச்சை லெக்-சைடில் அடித்த போது, ‘லெக் கல்லி’யில் நின்ற ஹாரிசிடம் பிடிபட்டார். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் விராட் கோலியும் (0) அதே ஓவரில் அதே போன்று கேட்ச் ஆனார். புஜாரா, கோலி ஜோடி இந்த ஆண்டில் ஒரே இன்னிங்சில் டக்-அவுட் ஆவது இது 2-வது நிகழ்வாகும். துணை கேப்டன் ரஹானே (1 ரன்), ரோகித் சர்மா (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது, 3-வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் (79 பந்து, 4 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

2-வது இன்னிங்சில் தடம்புரண்டாலும் இந்த டெஸ்டில் இந்தியாவின் கையே வலுவாக ஓங்கி நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா இதுவரை 346 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இவ்வளவு பெரிய ஸ்கோரை விரட்டிப்பிடிப்பது எளிதான காரியம் அல்ல. அதனால் இந்த ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும். இன்றைய ஆட்டத்தின் போது கொஞ்சம் மழை குறுக்கீடு இருக்கலாம். எஞ்சிய இரு நாட்களும் மெல்போர்னில் மழை பெய்வதற்கு 60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ரஞ்சி போட்டி அனுபவம் கைகொடுத்தது’ - பும்ரா

3-வது நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய பவுலர் பும்ரா கூறுகையில், ‘காலையில் நான் பந்து வீசி கொண்டிருந்த போது ஆடுகளத்தன்மை மெதுவாக (ஸ்லோ) காணப்பட்டது. பந்தும் சற்று மென்மையடைந்திருந்தது. அப்போது சக வீரர் ரோகித் சர்மா, ‘ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் போன்று வேகம் குறைத்து பந்து வீச முயற்சித்து பார்’ என்று கூறினார். அவரது யோசனையும் சரியாகவே பட்டது. இதன்படி மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஷான் மார்சுக்கு பந்தை வேகம் குறைத்து வீசியதற்கு பலன் கிடைத்தது. உள்நாட்டில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் மெதுவான ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் செய்திருக்கிறேன். அந்த அனுபவம் இங்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்ய உதவிகரமாக இருந்தது’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்திய மண்ணில் நான் இன்னும் டெஸ்டில் ஆடவில்லை என்பது உண்மை தான். ஆனால் வெவ்வேறு நாடுகளில் விளையாடும் போது, புதுபுதுப் அனுபவங்களையும், விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடியும். நான் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நன்றாக தொடங்கி இருக்கிறேன். தொடர்ந்து கற்றுக் கொண்டு முன்னேற்றம் காணுவேன் என்று நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டில் ஒரு ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்

ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பல்வேறு சாதனைகளை தன்னகத்தே பெற்றார். அதன் விவரம் வருமாறு:-

* குஜராத்தை சேர்ந்த 25 வயதான பும்ரா கடந்த ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 9 டெஸ்டில் விளையாடி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இவை அனைத்துமே வெளிநாட்டு டெஸ்ட்கள் தான். அவர் உள்நாட்டில் இன்னும் எந்த டெஸ்டிலும் விளையாடவில்லை. ஒரு ஆண்டில் வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற சிறப்பை பெற்று இருக்கிறார். இதே ஆண்டில் முகமது ஷமி 43 விக்கெட்டுகளுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்த வகையில் 3-வது இடத்தில் அனில் கும்பிளே (41 விக்கெட், 2006-ம் ஆண்டு) உள்ளார்.

* பும்ரா இந்த ஆண்டில் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 54 ரன்களுக்கு 5 விக்கெட்டும் (ஜோகன்னஸ்பர்க்), இங்கிலாந்துக்கு எதிராக 85 ரன்களுக்கு 5 விக்கெட்டும் (டிரென்ட் பிரிட்ஜ்) எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே ஆண்டில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை சாய்த்த ஒரே ஆசிய பவுலர் என்ற மகத்தான பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

* டெஸ்டில், அறிமுக ஆண்டிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற சிறப்பையும் பும்ரா (45 விக்கெட்) தட்டிச்சென்றார். இதற்கு முன்பு இந்திய சுழற்பந்து வீச்சாளர் திலீப் டோஷி 1979-ம் ஆண்டில் 40 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

* பும்ராவின் 33 ரன்களுக்கு 6 விக்கெட் என்பது, ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளரின் 2-வது சிறந்த பந்து வீச்சாக பதிவானது. 1985-ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த போட்டியில் கபில்தேவ் 106 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக தொடருகிறது.

* ஆஸ்திரேலிய மண்ணில் முதல் இன்னிங்சில் இந்தியா பெற்ற அதிகபட்ச முன்னிலை (292 ரன்) இதுவாகும். 2004-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்தியா 231 ரன்கள் முன்னிலை கண்டதே முந்தைய சிறப்புக்குரியதாகும்.

* இந்த ஆண்டில் இந்திய பவுலர்கள் மொத்தம் 247 விக்கெட்டுகள் (24 டெஸ்ட்) வீழ்த்தி இருக்கிறார்கள். டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஆண்டில் இந்திய பவுலர்கள் தரப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கை இது தான். 1979-ம் ஆண்டில் 237 விக்கெட் (20 டெஸ்ட்) வீழ்த்தியதே ஏற்கனவே அதிகபட்சமாக இருந்தது.

ஒரே நாளில் 15 விக்கெட்

மெல்போர்ன் ஆடுகளத்தில் முதல் இரண்டு நாட்களில் வெறும் 7 விக்கெட் மட்டுமே விழுந்ததால் சலனமற்ற ஆடுகளம், போட்டி டிராவை நோக்கி நகர்கிறது என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால் 3-வது நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறி விட்டது. ஆடுகளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவுகள், தூசு, சீராக இல்லாததால் குறிப்பிட்ட இடத்தில் பந்து படும் போது எகிறியும், ஸ்விங்கும் ஆவது என்று கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் வெகுவாக தடுமாறினர். இதனால் நேற்றைய ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் சரிந்தன. எஞ்சிய நாட்களில் மழை குறுக்கீடு இல்லாமல் இருந்தால் இந்த போட்டியில் முடிவு கிடைப்பது உறுதி.


Next Story