கிரிக்கெட்

அகர்வாலின் ரஞ்சி முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கண்டனம் + "||" + Agarwal condemnation of the Australian commentator who criticized Ranji Trophy

அகர்வாலின் ரஞ்சி முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கண்டனம்

அகர்வாலின் ரஞ்சி முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கண்டனம்
மயங்க் அகர்வாலின் ரஞ்சி கிரிக்கெட்டின் முச்சதத்தை விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளருக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்,

மெல்போர்ன் டெஸ்டில் மிகவும் கடினமான சூழலில் இந்திய அறிமுக வீரர் மயங்க் அகர்வால் முதல் இன்னிங்சில் அரைசதம் விளாசினார். ஆனால் அவர் குறித்து வர்ணனையாளரான ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கெர்ரி ஓ கீபே இழிவுபடுத்தும் வகையில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ‘மயங்க் அகர்வால் ரஞ்சி கிரிக்கெட்டில் முச்சதம் அடித்திருப்பதாக அறிகிறேன். அது ஜலந்தர் ரெயில்வே கேன்டீன் ஊழியர்கள் லெவன் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டதாக இருக்கும்’ என்றார். அவரது பேச்சு இந்திய அணி நிர்வாகத்தை கோபத்திற்குள்ளாக்கி இருக்கிறது.


இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறும் போது, ‘காயப்படுத்தும்படியான ஒரு கருத்து இது. ஆனால் இவ்வாறு சிலர் கூறும் போது ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுகிறது. அது நம் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இருக்கிறது. இத்தகைய விமர்சனங்களால் பாதிக்கப்படும் போது களத்தில் சிறப்பாக செயல்படுவது தான் அதற்கு எல்லாம் சரியான பதிலாக இருக்கும். இது குறித்து அதிகாரபூர்வமாக புகார் செய்யும் எண்ணம் ஏதும் இல்லை’ என்றார்.

இந்திய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறும் போது, ‘கெர்ரிக்காக அகர்வாலிடம் ஒரு திட்டம் உள்ளது. அதாவது நீங்கள் (கெர்ரி) கேண்டீன் திறக்கும் போது அகர்வால் அங்கு வந்து காபியை முகர்ந்து பார்ப்பார். அதை இந்திய காபியுடன் ஒப்பிடுவார். உங்களது காபி சிறந்ததா? அல்லது எங்கள் நாட்டின் காபி சிறந்ததா? என்பதை அவர் முடிவு செய்வார்’ என்று பதிலடி கொடுத்தார். கெர்ரி ஓ கீபேவை, சமூக வலைதளத்தில் இந்திய ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, தனது கருத்துக்கு, கெர்ரி ஓ கீபே மன்னிப்பு கேட்டுள்ளார்.