மெல்போர்ன் டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் இந்தியா: ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து போராட்டம்


மெல்போர்ன் டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் இந்தியா: ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து போராட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2018 11:30 PM GMT (Updated: 29 Dec 2018 8:12 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்புக்கு சென்றுள்ளது.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது.

ஆஸ்திரேலியாவுக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் (28 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (6 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மயங்க் அகர்வால், நாதன் லயனின் சுழலில் சூப்பராக இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். ஸ்கோர் 83 ரன்களை எட்டிய போது மயங்க் அகர்வால் 42 ரன்களில் (102 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து அவரது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து வந்த ஜடேஜா 5 ரன்னில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சில அருமையான ஷாட்டுகளை அடித்த ரிஷாப் பான்ட் 33 ரன்களில் (43 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் பிடிபட்டார். அத்துடன் இந்திய அணி இன்னிங்சை முடித்துக் கொண்டது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 11 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெல்போர்ன் மைதானத்தில் எந்த அணியும் 332 ரன்களுக்கு மேலான இலக்கை விரட்டிப்பிடித்ததில்லை. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு இந்த முறையும் தொடக்கம் சொதப்பியது.

தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் 3 ரன்னில், பும்ராவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கோலியிடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் (13 ரன்) ஜடேஜாவின் சுழலில் அருகில் நின்ற அகர்வாலிடம் சிக்கினார்.

மிடில் வரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆனால் இந்திய பவுலர்கள் இடைவிடாது கொடுத்த நெருக்கடியில் நீண்ட நேரம் அவர்களால் நிலைக்க முடியவில்லை. உஸ்மான் கவாஜா 33 ரன்னிலும் (59 பந்து), ஷான் மார்ஷ் 44 ரன்னிலும் (72 பந்து), டிராவிஸ் ஹெட் 34 ரன்னிலும் (92 பந்து) வேகப்பந்து வீச்சாளர்களால் விரட்டப்பட்டனர். கேப்டன் டிம் பெய்ன் 26 ரன்னில் (67 பந்து, 4 பவுண்டரி) நடையை கட்டினார்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 215 ரன்களுடன் தத்தளித்த போது, 4-வது நாளிலேயே வெற்றி இந்தியா வசமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 8-வது வரிசையில் ஆடிய பேட் கம்மின்ஸ், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ‘தண்ணி’ காட்டினார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் அவர் ஆடிய விதம் உள்ளூர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவருக்கு நாதன் லயன் நன்கு ஒத்துழைப்பு தந்தார்.

சமீபத்திய போட்டிகளில் இந்திய பவுலர்கள் முன்னணி தலைகளை எளிதில் உருட்டினாலும், கடைசி கட்ட பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நிறைய ரன்களை விட்டுக்கொடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. இந்த போட்டியிலும் அதே ஏமாற்றமே மிஞ்சியது.

4-வது நாளிலேயே ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்திய கேப்டன் கோலி, நடுவரிடம் பேசி கூடுதலாக அரைமணி நேரம் கேட்டு பெற்றார். அந்த நேரத்திலும் கம்மின்ஸ்- லயன் ஜோடியை அசைக்க முடியவில்லை. இவர்கள் கூட்டாக ஒரு மணி நேரம் சமாளித்து விட்டனர். கம்மின்சின் மன உறுதிமிக்க போராட்டம், போட்டியை கடைசி நாளுக்கு நகர்த்தியுள்ளது.

ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. டெஸ்டில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த கம்மின்ஸ் 61 ரன்களுடனும் (103 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), நாதன் லயன் 6 ரன்னுடனும் (38 பந்து) களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், பும்ரா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 141 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 2 விக்கெட் மட்டுமே உள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்தியாவின் பக்கமே வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘கம்மின்சும், நானும் கடைசி நாளில் களம் இறங்கி முதல் பந்தில் இருந்து போராடுவோம். ஆஸ்திரேலிய அணிக்குரிய தொப்பியை அணிவது எவ்வளவு பெரிய கவுரவம் என்பதை களத்தில் வெளிப்படுத்த முயற்சிப்போம்’ என்றார்.

5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மழையால் பாதிக்கப்படுமா?

இன்றைய கடைசி நாளில் இந்திய அணி எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் சீக்கிரம் வீழ்த்தி வெற்றிக்கனியை பறித்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், மழையும் ஒரு பக்கம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு மழை பெய்வதற்கு 32 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும், பிற்பகல் 1 மணி அளவில் மழை பொழிவதற்கு 23 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தோல்வியில் இருந்து தப்பிக்க மழை தான் ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.

Next Story