கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி: தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை + "||" + India defeated Australia to win in Melbourne Test: 2-1 in the series

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி: தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி: தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை
புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது.
மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 443 ரன்களும் (டிக்ளேர்), ஆஸ்திரேலியா 151 ரன்களும் எடுத்தன. ஆஸ்திரேலியாவுக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 8 விக்கெட்டுக்கு 106 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்து 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.


மெகா இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். இந்திய அணி வெற்றியை நெருங்கிய நிலையில், பேட் கம்மின்சின் போராட்டத்தால் ஆட்டம் கடைசி நாளுக்கு நகர்ந்தது. 4-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களுடன் தத்தளித்தது. பேட் கம்மின்ஸ் (61 ரன்), நாதன் லயன் (6 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று காலை அங்கு விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் உணவு இடைவேளை வரை ஆட்டம் நடைபெறவில்லை. இந்தியாவின் வெற்றி வாய்ப்பை வருணபகவான் பறித்து விடுவாரோ? என்று பயந்த வேளையில் மழை ஓய்ந்து ஆட்டம் தொடங்கியது.

ஆஸ்திரேலியாவின் எஞ்சிய இரு விக்கெட்டுகளையும் நமது பவுலர்கள் 27 பந்துகளில் காலி செய்தனர். கம்மின்ஸ் (63 ரன்) பும்ராவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் ஆனார். நாதன் லயன் (7 ரன்) இஷாந்த் ஷர்மா வீசிய ஷாட்பிட்ச் பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் சிக்கினார்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 89.3 ஓவர்களில் 261 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அட்டகாசப்படுத்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முன்னதாக அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

தொடரில் முன்னிலை வகிப்பதன் மூலம் இந்திய அணி ‘பார்டர்-கவாஸ்கர்’ கோப்பையையும் தக்கவைத்துக் கொண்டது. ஏனெனில் இவ்விரு அணிகள் இடையிலான முந்தைய தொடரை (கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்தது) இந்தியா தான் வென்று இருந்தது. அதனால் கடைசி டெஸ்டில் தோற்றாலும் கோப்பை கையை விட்டு நழுவாது.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் மார்னஸ் லபுஸ்சானே கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

37 ஆண்டுகளுக்கு பிறகு...

மெல்போர்னில் இந்திய அணி வெற்றிக்கனியை ருசிப்பது 37 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே 1977-78-ம் ஆண்டு பிஷன்சிங் பெடி தலைமையிலான இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்திலும், 1981-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது. அதன் பிறகு இப்போது தான் தித்திப்பான முடிவு கிடைத்திருக்கிறது. இங்கு இந்திய அணி இதுவரை 13 டெஸ்டில் விளையாடி அதில் 3-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும், 2-ல் ‘டிரா’வும் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில், இந்திய அணிக்கு அதிக வெற்றிகள் கிட்டிய இடமாகவும் மெல்போர்ன் திகழ்கிறது.

தெண்டுல்கர், ஷேவாக் பாராட்டு

இந்திய அணியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னாள் வீரர்களும் பாராட்டு மழை பொழிந்துள்ளனர். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வியக்கத்தக்க முயற்சியின் மூலம் மெல்போர்னில் வாகை சூடி இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த வெற்றியில் பும்ராவின் பந்து வீச்சே முக்கிய துருப்பு சீட்டாக இருந்தது. மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பும்ரா நாளுக்கு நாள் மேன்மை அடைந்து வருகிறார். இப்போது உலகின் சிறந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷேவாக் கூறும் போது, ‘மெல்போர்னில் இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றி கிடைத்து இருக்கிறது. மிகச்சிறந்த கூட்டுமுயற்சிக்கு கிடைத்த பரிசு இது. இப்போது சிட்னியில் வரலாறு படைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அணியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் வாழ்த்துகள்’ என்றார்.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியாவிடம் இப்போது இருக்கும் அற்புதமான பந்து வீச்சுக்கு எதிராக, வலுவற்ற ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் சிட்னியிலும் மிரளத்தான் போகிறார்கள். இந்தியா தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்லப்போகிறது. உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடுங்கள்’ என்று கூறியுள்ளார்.