ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மந்தனா தேர்வு


ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மந்தனா தேர்வு
x
தினத்தந்தி 31 Dec 2018 11:15 PM GMT (Updated: 31 Dec 2018 10:30 PM GMT)

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில், 2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 2018-ம் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார். இந்த கவுரவத்தை பெறும் 2-வது இந்திய மங்கை மந்தனா ஆவார். ஏற்கனவே 2007-ம் ஆண்டு இந்திய மூத்த பவுலர் ஜூலன் கோஸ்வாமி இந்த விருதை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆண்டின் சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருதையும் 22 வயதான மந்தனா தட்டிச்சென்றார். விருதுக்குரிய காலக்கட்டத்தில் (2018-ம் ஆண்டு ஜனவரி 1 ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை) மந்தனா 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 669 ரன்களும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 25 ஆட்டங்களில் ஆடி 622 ரன்களும் எடுத்துள்ளார். சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரைஇறுதி வரை முன்னேறியதில் மந்தனா முக்கிய பங்கு வகித்தார். இரட்டை விருதுக்கு தேர்வாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மந்தனா, ‘அணிக்கு அளிக்கும் பங்களிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம் இது. இன்னும் கடினமாக உழைத்து சிறப்பாக செயல்படுவதற்கு உத்வேகம் அளிக்கும்’ என்று குறிப்பிட்டார்.

இதே போல் 20 ஓவர் போட்டி உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாக கைப்பற்றியதில் உறுதுணையாக இருந்த 28 வயதான அலிசா ஹீலே ஆண்டின் சிறந்த 20 ஓவர் போட்டி வீராங்கனை விருதுக்கு தேர்வானார். அந்த உலக கோப்பையில் அவர் 225 ரன்கள் (6 ஆட்டம்) குவித்து தொடர்நாயகி விருதை வாங்கியது நினைவு கூரத்தக்கது. வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் 19 வயது சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டன் பெறுகிறார்.

ஐ.சி.சி. கனவு அணிகளும் அறிவிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி அணிக்கு நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அணியில் இந்திய தரப்பில் மந்தனா, பூனம் யாதவ் ஆகியோருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

11 பேர் கொண்ட 20 ஓவர் போட்டி கனவு அணியில் மந்தனா, பூனம் யாதவ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகிய இந்தியர்கள் அங்கம் வகிக்கிறார்கள். கேப்டன் பதவி ஹர்மன்பிரீத் கவுருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜிக்கு இரண்டு அணியிலும் இடம் கிடைக்கவில்லை.


Next Story