2018-ம் ஆண்டு கிரிக்கெட்டில் கலக்கியது யார்-யார்? இந்திய கேப்டன் விராட் கோலி ஆதிக்கம்


2018-ம் ஆண்டு கிரிக்கெட்டில் கலக்கியது யார்-யார்? இந்திய கேப்டன் விராட் கோலி ஆதிக்கம்
x
தினத்தந்தி 31 Dec 2018 11:30 PM GMT (Updated: 2019-01-01T04:18:44+05:30)

2018-ம் ஆண்டு கிரிக்கெட்டில், இந்திய கேப்டன் விராட் கோலியே பேட்டிங்கில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

மும்பை,

புத்தாண்டு பிறந்து விட்டது. கிரிக்கெட்டை பொறுத்தவரை 2019-ம் ஆண்டில் மிகப்பெரிய போட்டியான உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. அதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் கலக்கியது யார்-யார்? என்பதை இங்கு பார்க்கலாம்.

2018-ம் ஆண்டில் நடைபெற்ற 48 டெஸ்ட் போட்டிகளில் 43-ல் முடிவு கிடைத்துள்ளன. இதில் அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இங்கிலாந்து விளங்குகிறது. அந்த அணி 13 டெஸ்டில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா கண்டது. இந்திய அணி 14 டெஸ்டில் பங்கேற்று 7-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி 10 டெஸ்டில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றது. வங்காளதேசத்துக்கு எதிராக இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 713 ரன்கள் குவித்தது அதிகபட்சமாகும். இன்னிங்சில் 100-க்கு குறைவான ஸ்கோரை 5 அணிகள் எடுத்துள்ளன. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வங்காளதேச அணி 43 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும்.

அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலியின் ஆதிக்கம் நீளுகிறது. அவர் 5 சதங்கள் உள்பட 1,322 ரன்கள் (13 டெஸ்ட்) சேர்த்து இருக்கிறார். மொத்தம் 68 சதங்கள் அடிக்கப்பட்டன. தனிநபர் அதிகபட்ச ரன்களை நியூசிலாந்தின் டாம் லாதம் (264* ரன்) இலங்கைக்கு எதிராக பதிவு செய்தார். அதிக விக்கெட் வீழ்த்தியதில் தென்ஆப்பிரிக்காவின் ரபடா (52 விக்கெட்) முதலிடம் வகிக்கிறார்.

கடந்த ஆண்டில் நடந்த ஒரு நாள் போட்டிகளின் எண்ணிக்கை 128. இங்கும் அதிக வெற்றிகளை குவித்த அணி இங்கிலாந்து தான். 24 ஆட்டங்களில் 17-ல் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி 6-ல் தோல்வியை தழுவியது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்திய அணி 20 ஆட்டங்களில் 14-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டது. 2 ஆட்டங்கள் டை (சமன்) ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து, உலக சாதனை ஸ்கோரை பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக ஜிம்பாப்வே 67 ரன்னில் ஆல்-அவுட் ஆனது ஆண்டின் குறைந்தபட்சமாகும்.

14 ஒரு நாள் போட்டிகளில் 6 சதங்கள் உள்பட 1,202 ரன்கள் திரட்டியுள்ள இந்திய கேப்டன் கோலியே இங்கும் ‘நம்பர் ஒன்’ ஆவார். 82 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. தனிநபர் அதிகபட்சமாக பாகிஸ்தானின் பஹார் ஜமான், ஜிம்பாப்வேக்கு எதிராக 210 ரன்கள் விளாசினார். விக்கெட் கைப்பற்றியதில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானின் (48 விக்கெட்) கை ஓங்கி நிற்கிறது.

மொத்தம் 81 இருபது ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. பாகிஸ்தான் அதிக வெற்றி (19 ஆட்டத்தில் 17-ல் வெற்றி) பெற்ற அணியாக முத்திரை பதித்துள்ளது. இந்திய அணி 19 ஆட்டத்தில் 14-ல் வெற்றியை வசப்படுத்தியது. 7 சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் ஜிம்பாப்வேக்கு எதிராக 172 ரன்கள் குவித்தது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

டெஸ்டில் வெஸ்ட் இண்டீசின் ஹெட்மயரும் (17 சிக்சர்), ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் ரோகித் சர்மாவும் (39 சிக்சர்), 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்தின் காலின் முன்ரோவும் (35 சிக்சர்) சிக்சர் மன்னர்களாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.

விக்கெட் கீப்பர்களில் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக்கும் (47 அவுட்), ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரும் (35 அவுட்) மற்றவர்களை விட அதிகம் பேரை ஆட்டம் இழக்கச் செய்திருக்கிறார்கள். அதிகம் கேட்ச் செய்த பீல்டர்களில், டெஸ்டில் இலங்கையின் குசல் மென்டிசும் (21 கேட்ச்), ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜாசன் ராயும் (13 கேட்ச்) அசத்தியுள்ளனர்.

மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து விராட் கோலி மொத்தம் 11 சதங்கள் உள்பட 2,753 ரன்கள் சேர்த்துள்ளார். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கோலி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். 2016-ம் ஆண்டில் 2,595 ரன்களும், 2017-ல் 2,818 ரன்களும் அவர் எடுத்து இருந்தார்.


Next Story