சிட்னியில் வரலாறு படைக்குமா இந்திய அணி? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்


சிட்னியில் வரலாறு படைக்குமா இந்திய அணி? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 1 Jan 2019 11:00 PM GMT (Updated: 1 Jan 2019 10:13 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி நாளை கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி நாளை கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.

சிட்னி டெஸ்ட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்டுகளில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மெல்போர்னில் கிடைத்த வெற்றியால் அதிக நம்பிக்கையை பெற்றுள்ள இந்திய அணி, கடைசி டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.

வரலாறு படைக்குமா?

இந்திய அணி 1947–ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. ஏன், எந்த ஒரு ஆசிய அணியும் ஆஸ்திரேலிய மண்ணில டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. தற்போது இந்திய அணிக்கு புதிய வரலாறு படைக்க பொன்னான வாய்ப்பு கனிந்துள்ளது. கடைசி டெஸ்டில் டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. புஜாரா (2 சதத்துடன் 328 ரன்), கேப்டன் விராட் கோலி (259 ரன்) நல்ல பார்மில் உள்ளனர். மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து தருவது அவசியமாகும். அப்போது தான் மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி விளையாட முடியும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (20 விக்கெட்), முகமது ‌ஷமி (14 விக்கெட்), இஷாந்த் ‌ஷர்மா (11 விக்கெட்) வலு சேர்க்கிறார்கள்.

இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, மனைவிக்கு குழந்தை பிறந்ததால் தாயகம் திரும்பி விட்டார். இதனால் அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். ஆஸ்திரேலியாவில், சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் ஒரே ஆடுகளம் சிட்னி தான். அதனால் காயத்தில் இருந்து ஏறக்குறைய தேறிவிட்ட அஸ்வினை 2–வது சுழற்பந்து வீச்சாளராக சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என்பது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கிறது. அணியில் யார்–யாருக்கு இடம் கிடைக்கும் என்பது இன்று தெரிந்து விடும்.

லபுஸ்சானே

இந்திய அணியின் எழுச்சியால் ஆஸ்திரேலிய அணி கலகலத்து போய் உள்ளது. அனுபவம் வாய்ந்த ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாததால் அவர்களின் பேட்டிங் வரிசை சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஆனாலும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என்று மிரட்டக்கூடிய பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை கட்டிக்காப்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லா வகையிலும் கடுமையாக மல்லுகட்டுவார்கள். சுழற்பந்து வீச்சாளரும், ஆல்–ரவுண்டருமான மார்னஸ் லபுஸ்சானே அழைக்கப்பட்டு இருப்பதால், மிட்செல் மார்ஷ் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்சை கழற்றி விட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது.

சிட்னி மைதான கண்ணோட்டம்

சிட்னியில் 1882–ம் ஆண்டு முதல், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இங்கு ஆஸ்திரேலிய அணி 106 டெஸ்டுகளில் விளையாடி அதில் 59–ல் வெற்றியும், 28–ல் தோல்வியும், 19–ல் டிராவும் கண்டுள்ளது.

இந்திய அணி இங்கு 11 டெஸ்டுகளில் பங்கேற்று 1–ல் வெற்றியும், 5–ல் தோல்வியும், 5–ல் டிராவும் சந்தித்துள்ளது. இந்த ஒரு வெற்றியும் பெற்று 40 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அதாவது 1978–ம் ஆண்டு பி‌ஷன்சிங் பெடி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 2 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு இந்த மைதானம் ராசியான ஒன்றாகும். கடைசியாக இங்கு விளையாடிய 24 டெஸ்டுகளில் 2–ல் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது.

2004–ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுக்கு 705 ரன்கள் குவித்ததே, இங்கு ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோராகும். இதே டெஸ்டில் சச்சின் தெண்டுல்கர் 241 ரன்கள் விளாசியது, இந்த நாள் வரைக்கும் இங்கு ஆசிய பேட்ஸ்மேனின் அதிகபட்சமாக தொடருகிறது.

பொதுவாக சிட்னி ஆடுகளம் பேட்டிங்குக்கும் கடைசி 4, 5–வது நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கும் உதவிகரமாக இருக்கும். இந்த முறையும் அதே தன்மையுடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர்கள் ஷேன் வார்னே (64 விக்கெட்), ஸ்டூவர்ட் மெக்கில் (53 விக்கெட்) ஆகியோர் இங்கு அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இரு இடம் வகிப்பது கவனிக்கத்தக்கது.

அதிகாலை 5 மணிக்கு...

மொத்தத்தில் புத்தாண்டை வெற்றியுடன் தொடங்குவதற்கு இரு அணி வீரர்களும் வரிந்து கட்டுவார்கள் என்பதால் இந்த டெஸ்டில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது. முதல் மூன்று டெஸ்டுகளிலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்று இருப்பதால் இந்த டெஸ்டிலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனிடென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story