கிரிக்கெட்

கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடக்கம்: ‘ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் சவாலானது’ விராட் கோலி பேட்டி + "||" + 'It's very challenging to beat Test series in Australian soil' Virat Kohli interview

கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடக்கம்: ‘ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் சவாலானது’ விராட் கோலி பேட்டி

கடைசி டெஸ்ட் சிட்னியில் இன்று தொடக்கம்: ‘ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது மிகவும் சவாலானது’ விராட் கோலி பேட்டி
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது எப்போதும் சவால்மிக்கது என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது எப்போதும் சவால்மிக்கது என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் 3 டெஸ்டுகளில் 2–ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை உச்சிமுகர்ந்ததில்லை. அதனால் புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி படையினர் தயாராகி உள்ளனர்.

அஸ்வின் சந்தேகம்

மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர்களை பார்க்க ரோகித் சர்மா தாயகம் திரும்பி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா இடது விலாபகுதியில் காயத்தால் அவதிப்படுவதால் அவரும் இந்த டெஸ்டில் விளையாடவில்லை. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் லோகேஷ் ராகுல், உமேஷ் யாதவ், அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

வயிற்று பகுதியில் ஏற்பட்ட வலியால் கடந்த இரு டெஸ்டுகளில் ஆடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்த டெஸ்டுக்கும் உடல்தகுதியை எட்டவில்லை என்று இந்திய அணியின் செய்தி தொடர்பாளர் முதலில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும், ‘துரதிர்ஷ்டவசமாக கடந்த இரண்டு வெளிநாட்டு தொடர்களிலும் அஸ்வினுக்கு இது போன்ற காயப்பிரச்சினை தான் ஏற்பட்டது. டெஸ்ட் அணியில் அஸ்வின் மிகவும் முக்கியமான வீரர். அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் இருக்க வேண்டும், இன்னும் நீண்ட காலம் அணிக்கு பங்களிப்பு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் உடல்தகுதியை எட்ட இயலாமல் போனதால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்’ என்று கூறினார். இவ்வாறு எல்லாம் கூறிய பிறகு அடுத்த 2 மணி நேரத்தில் அணிப்பட்டியலில் அஸ்வினின் பெயரும் இடம் பெற்றது. அவர் சிட்னி டெஸ்டில் ஆடுவாரா? இல்லையா? என்பது போட்டிக்கு முன்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் களம் காணுவது சந்தேகம் தான்.

விராட் கோலி பேட்டி

கடைசி டெஸ்ட் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

நான் இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்று 4 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த தொடரை கைப்பற்றினால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நான் 3–வது முறையாக டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளேன். இங்கு வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன். சில சமயம் தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால் ஒரு அணியாக இங்கு சாதிப்பது பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது. தனிப்பட்ட சாதனைக்காக நமது பெயர் சாதனை பட்டியலில் இடம் பெறலாம். ஆனால் அணி வெற்றி பெறாவிட்டால் அந்த சாதனையால் எந்த பிரயோஜனமும் கிடையாது.

இங்கு வாகை சூடினால் அது மிக, மிக பெரிய தொடர் வெற்றியாக, எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணிக்கும் இருக்கும். ஏனெனில் சிட்னியில் இருந்து தான் அணியில் மாற்றம் செய்வதற்குரிய காலக்கட்டம் ஆரம்பித்தது. அதனால் சிட்னியை என்னால் மறக்க முடியாது. 2014–ம் ஆண்டில் டோனி டெஸ்ட் கேப்டன் பதவியை உதறிய போது, சிட்னியில் இருந்தே எனது கேப்டன்ஷிப் பயணம் தொடங்கியது. அப்போது முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாக இருந்தோம். உலக டெஸ்ட் தரவரிசையில் 6 அல்லது 7–வது இடம் வகித்தோம். இப்போது இங்கு உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக வந்திருக்கிறோம். இதே வழிமுறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம்.

ஆடுகளம் குறித்து...

கடந்த ஆண்டு நல்லபடியாக முடிந்தது. புத்தாண்டையும் வெற்றிகரமாக தொடங்க முயற்சிப்போம். இதை தனித்துவமான டெஸ்ட் போட்டியாக எடுத்துக் கொண்டு, களத்தில் தீவிரத்துடன் முழு முயற்சியை வெளிப்படுத்துவோம். அவர்களின் சவாலை எதிர்கொண்டு, வெற்றி காணும் ஆர்வத்தில் உள்ளோம்.

பொதுவாக சிட்னி ஆடுகளம் முதல் 2–3 நாட்களுக்கு பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும். அதன் பிறகு ரிவர்ஸ் ஸ்விங், சுழற்பந்து வீச்சு எடுபடும். வெயில் நன்கு அடிக்கும் போது, ஆடுகளத்தின் வழக்கமான தன்மையில் எந்த மாற்றமும் இருக்காது.

காயத்தை சமாளிப்பது எப்படி?

எனது தனிப்பட்ட உடல்தகுதியை எடுத்துக் கொண்டால், 2011–ம் ஆண்டில் இருந்து எனக்கு முதுகு தண்டுவடத்தின் அடிப்பகுதியில் பிரச்சினை இருக்கிறது. சில ஆண்டுகளாக உடற்பயிற்சி முறைகளை சரியாக செய்து, இந்த பிரச்சினையை சமாளித்து வருகிறேன். உடற்பயிற்சி மிகவும் முக்கியம். பணிச்சுமை அதிகரிக்கும் போது முதுகில் பிடிப்பு உருவாகும். அது 2–3 நாட்களில் குணமாகி விடும். அதனால் அது பற்றி கவலைப்படுவதில்லை.

அஸ்வின் காயத்தால் தொடர் முழுவதும் அணியின் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதாகி விட்டது. பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக ஹனுமா விஹாரி அருமையாக பந்து வீசுகிறார். அவரிடம் பந்தை கொடுக்கும் போது எல்லாம், அஸ்வின் விளையாடவில்லையே என்ற உணர்வை எங்களுக்குள் இல்லாமல் செய்து விடுகிறார்.

இவ்வாறு கோலி கூறினார்.

டிம் பெய்ன் கருத்து

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியா வியூகங்களை வகுத்துள்ளது. அந்த அணியிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அனேகமாக ஆரோன் பிஞ்ச், மிட்செல் மார்சுக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், ‘இந்த தொடரில் எங்களது வீரர்கள் யாரும் இதுவரை சதங்கள் அடிக்கவில்லை என்பதை அறிவோம். சதங்கள் அடிக்காவிட்டால் பெரும்பாலும் டெஸ்டில் வெற்றி கிடைக்காது. இது பற்றி எங்களுக்குள் பேசி இருக்கிறோம். இந்த வி‌ஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். தொடரை இழப்பது குறித்து நான் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஆட்டத்திலும் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும். இந்தியாவுக்கு கடும் போராட்டம் கொடுக்க வேண்டும். இந்த வகையில் தான் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறேன்’ என்றார்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி அல்லது அஸ்வின், ரிஷாப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் அல்லது ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சானே, டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.