இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு; ஆஸ்திரேலியா 236/6 (83.3 ஓவர்கள்)


இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்:  மழையால் ஆட்டம் பாதிப்பு; ஆஸ்திரேலியா 236/6 (83.3 ஓவர்கள்)
x
தினத்தந்தி 5 Jan 2019 8:45 AM GMT (Updated: 5 Jan 2019 8:45 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.

சிட்னி,

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் கடந்த 3ந்தேதி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர்.

இதில், ராகுல் 9 (6 பந்துகள்) குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலுடன், புஜாரா கைகோர்த்து விளையாடினார்.  இதில் மயங்க் அகர்வால் 77 ரன்கள் (112 பந்துகள்) அடித்து ஆட்டமிழந்தார்.  இதன்பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 18-வது சதம் இதுவாகும். இதற்கிடையில், ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்திருந்தது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று 2வது நாள் ஆட்டம் தொடர்ந்தது.  இதில், உணவு இடைவேளை வரை இந்தியா 117 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்களை எடுத்திருந்தது.  புஜாரா இரட்டை சதம் பூர்த்தி செய்வார் என எதிர்பார்த்த நிலையில் 193 ரன்கள் (373 பந்துகள் 22 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இந்திய அணி தேநீர் இடைவேளையில் 146 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது.  இதன்பின் ஆட்டம் தொடர்ந்தது.  இதில் ஜடேஜா (81), விஹாரி (42) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் வீரர் பன்ட் 159 (189 பந்துகள், 15 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்களில் ஹாரிஸ் (79), கவாஜா (27), லபூஸ்சாக்னே (38), மார்ஷ் (8) மற்றும் ஹெட் (20) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி தேநீர் இடைவேளை வரை 68 ஓவர்கள் வரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.  இந்த நிலையில், பெய்னி (5 ரன்கள்) குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார்.  தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் மற்றும் கம்மின்ஸ் விளையாடி வந்தனர்.

இந்த நிலையில், மழையால் ஆட்டம் பாதிப்படைந்து உள்ளது.  83.3 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை பெய்ய தொடங்கியது.  இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  ஹேண்ட்ஸ்காம்ப் 28 (91 பந்துகள் 3 பவுண்டரிகள்), கம்மின்ஸ் 25 (41 பந்துகள் 6 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  இந்நிலையில் 3வது நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

Next Story