தோல்வி பயமே ஆஸ்திரேலிய வீரர்களின் சீண்டலுக்கு காரணம் -மயங்க் அகர்வால்


தோல்வி பயமே ஆஸ்திரேலிய வீரர்களின் சீண்டலுக்கு காரணம் -மயங்க் அகர்வால்
x
தினத்தந்தி 5 Jan 2019 1:13 PM GMT (Updated: 5 Jan 2019 1:13 PM GMT)

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மயங்க் அகர்வால், முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறியிருக்கிறார்.

மயங்க் அகர்வால் பேட்டிங் திறமையும், லாவகமான ‘ஷாட்’ தேர்வுகளும் ஆஸ்திரேலிய பவுலர்களை கலங்கடித்துவிட்டது. அதனால் அறிமுக போட்டியிலேயே அரை சதத்தை பதிவு செய்ததுடன், இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தையும் அமைத்து கொடுத்தார்.

இவரது பங்களிப்பு இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர, ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தை சீண்டலை கட்டவிழ்த்துவிட்டனர். இருப்பினும் தன்னுடைய நிலையான ஆட்டத்தினால் அவர்களுக்கு பதிலடி கொடுத்ததுடன், இந்திய அணிக்கான வெற்றி பாதையையும் ஏற்படுத்தி கொடுத்தார்.

அவரிடம் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவத்தையும், ஆஸ்திரேலிய வீரர்களின் சீண்டல்களையும் பற்றி கேட்க, அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஆஸ்திரேலியா வீரர்கள் வம்புக்கு இழுப்பதில் கெட்டிக்காரர்கள். அவர்களது ‘சீண்டல் திறமை’யை உங்களிடம் வெளிகாட்டியதை பற்றி கூறுங்கள்?

அது எதிர்பார்த்த ஒன்றுதான். டெஸ்ட் போட்டிகளில் அடிக்கடி வாய்மொழி சீண்டல்கள் நிகழ்வது சாதாரண ஒன்றுதான். இருப்பினும் இம்முறை ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லைமீறிய சீண்டல்களை கட்டவிழ்த்துவிட்டனர்.

முதல் இரண்டு போட்டிகளில் தொடக்க ஆட்ட வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், முரளி விஜய் ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத காரணத்தை மையப்படுத்தி என்னையும், ஹனுமா விஹாரியையும் வம்புக்கு இழுத்தனர். ‘இந்திய அணியின் புதுநம்பிக்கை நட்சத்திரங்கள் வந்துவிட்டனர். இவர்கள் சதம் அடிப்பதை யாரும் தடுக்க முடியாது’ என்று அவர் களுக்குள்ளாகவே சிரித்துகொண்டனர். மேலும் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயினின் சீண்டல்களும் அதிகமாக இருந்தது. அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவதால், இந்திய பேட்ஸ்மேன்களை சீண்டிப்பார்ப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய வர்ணனையாளர் களின் நையாண்டி பேச்சுகளை கடந்து வந்த விதம் பற்றி கூறுங்கள்?

ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்களை வம்புக்கு இழுத்தால், ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தையே வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். அவர்கள் பேசியதை என்னால் கேட்கமுடியவில்லை. இருப்பினும் இந்திய பயிற்சியாளர்களின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

நான் உள்ளூர் போட்டிகளில் முச்சதம் அடித்ததை கிண்டல் அடிக்கும் விதமாக அவர்கள் பேசியிருக்கிறார்கள். முச்சதம் அடித்த போட்டியில் எனக்கு பந்து வீசியது, பந்துவீச்சாளர்களா? இல்லை ஓட்டல் ஊழியர்களா? என்று கிண்டல் அடித்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களது வீண்பேச்சு, இந்திய கிரிக்கெட் வாரியத்தையே வம்புக்கு இழுப்பதாக இருந்ததால் டோனி, கோலி, ரவி சாஸ்திரி ஆகியோரின் கடும்கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த சர்ச்சையினால் ஆஸ்திரேலிய அணியினரின் சீண்டல்கள் குறையுமா?

இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான். ஆஸ்திரேலிய அணியின் பெரும் பலமே, சீண்டல் பேச்சுகள்தான். ஆட்டக்காரர்களை வீண்பேச்சுகளால் கோபப் படுத்தி, அவர்களது அமைதியான மனநிலையை குழப்பி, அதன்மூலம் விக்கெட் எடுப்பதில் அவர்கள் கில்லாடிகள். அவர்களது பாரம்பரியத்தை, திடீரென மறந்துவிடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தோல்வி பயம்தான் அதற்கு முக்கிய காரணம். எது எப்படியோ..., அவர்களது சீண்டல்களுக்கு, சமீபகாலமாக இந்திய அணியின் சார்பாகவும் பதிலடி கொடுக்கப்படுவது, மனநிறைவாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினை, இந்திய விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் கிண்டல் செய்ததை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இந்த விஷயத்தில் எது சரி, எது தவறு என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. ஆனால் என்னுடைய முழு ஆதரவும் ரிஷாப் பண்டிற்கு உண்டு. ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், இந்திய அணியின் பெரும்பாலான வீரர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார். ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், விராட் கோலி, பும்ரா... என அவரது சீண்டலில் சிக்காதவர்கள் சிலரே. குறிப்பாக அவரது கேலி பேச்சுகள் ரோகித் சர்மாவையும், ரிஷாப் பண்டையுமே அதிகமாக குறிவைக்கும். 3-வது டெஸ்டிலும், டிம் பெயினின் குறி தவறவில்லை. ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் லியான் ஓவரை ரோகித் சர்மா எதிர்கொண்டபோது, ‘ரோகித் சர்மா இந்த ஓவரில் ஒரு சிக்சராவது அடித்தால், நான் அவரது ஐ.பி.எல்.அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பேன்’ என்று சக வீரர்களிடம் கூறி சிரித்தார். அதேபோல ரிஷாப் பண்ட் ஆடும்போது, ‘ஒருநாள் தொடரின் விக்கெட் கீப்பராக டோனி வந்துவிட்டார், நீ என்ன செய்ய போகிறாய். விளையாட வாய்ப்பில்லாமல் இருக்கும்போது என்னுடைய குழந்தைகளை கவனித்து கொள்கிறாயா?’ என்று நக்கல் அடித்திருக்கிறார். அவரது சீண்டலுக்குதான் ரிஷாப் பண்ட் பதிலடி கொடுத்தார். இந்திய வீரர்களை வம்புக்கு இழுத்த டிம் பெயினை ‘தற்காலிக கேப்டன்’ என்று ரிஷாப் பண்ட் வறுத்தெடுத்தது, சுவாரசியமாக இருந்தது.

வார்த்தை சீண்டல்கள், இருவேறு அணியின் நட்புறவை பாதிக்குமா?

ஆண்ட்ரூ சைமன்ஸ்-ஹர்பஜன் சிங், ஸ்ட்ராஸ்-யுவராஜ் சிங், சச்சின் தெண்டுல்கர்-அக்தர்... இப்படி பல ஜோடிகளை இந்த கேள்விக்கான உதாரணமாக எடுத்துகொள்ளலாம். இவர்கள் போட்டிக்களத்தில் நேருக்கு நேர் மல்லுகட்டினாலும், தனிப்பட்ட வாழ்வில் சிறந்த நண்பர்கள். போட்டியும், சூழ்நிலையும் வீரர் களுக்குள் சண்டை, சச்சரவுகளை உண்டாக்கினாலும், காலம் அவர்களை நல்ல நண்பர்களாக மாற்றி விடுகிறது. இந்த கோட்பாட்டில் இருந்து விலகி செல்பவர்கள் சிலரே.

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்திருந்து விளையாடுவது கடினமான ஒன்று. அதை எப்படி சமாளித்தீர்கள்?

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குபவர்கள், அந்த அணியின் சிறந்த ஆட்டக்காரர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான், முதல் 10 ஓவர்களுக்கு தாக்குப்பிடிக்கமுடியும். புது பந்து நன்றாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால்தான் சிறந்த ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுத்து, ஆட்டத்தை தொடங்கி வைக்க அனுப்பிவைப்பார்கள். அவர்களது வேலை, புதுபந்தை மட்டையால் அடித்து சேதப்படுத்தி, பழைய பந்தாக மாற்றுவதுதான். இதுநடந்துவிட்டால், ஆட்டம் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். பழைய பந்தில் உயிர் இருக்காது. அதனால் வேகமும், ‘ஸ்விங்’-கும் இருக்காது. இந்த பார்முலாவைதான் நானும், ஹனுமா விஹாரியும் பயன்படுத்தினோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

தற்போது நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டி யாருக்கு சாதகமாக முடியும்?

என்னுடைய கணிப்புபடி, இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக முடியலாம். ஏனெனில் 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்கள், ஆடுகளத் தின் தன்மை மெதுவாகவும், மற்ற மூன்று நாட்கள் வேகமாகவும் இருந்தது. ஆடுகளத்தின் தன்மையை விராட் கோலி முன்கூட்டியே புரிந்துகொண்டதால், டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தார். அவர் எதிர்பார்த்தபடியே முதல் இரண்டு நாட்களில் அதிக ரன்களை குவிக்க முடிந்தது. கடைசி மூன்று நாட்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. புரிதல், அதிர்ஷ்டம், ஆட்டத்திறன் ஆகிய மூன்றும் கடந்த போட்டியில் கைகொடுத்தன. ஆனால் இந்த போட்டியில் இந்த மூன்றில் ஒன்றை கோட்டைவிட்டாலும், வெற்றி ஆஸ்திரேலியா பக்கம் திரும்பிவிடும். மேலும் ஆஸ்திரேலிய அணியினர், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கக்கூடாது என்ற மனநிலையோடு போராடுவார்கள்.

Next Story