கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாலோ–ஆனை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம் + "||" + Last Test against India: Avoid Followon Australian team fight

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாலோ–ஆனை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாலோ–ஆனை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி போராட்டம்
சிட்னியில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆனை தவிர்க்க போராடுகிறது.

சிட்னி,

சிட்னியில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆனை தவிர்க்க போராடுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாரா (193 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (159 ரன்) ஆகியோரின் சதங்களின் உதவியுடன் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. டெஸ்ட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த அணி தோற்றதில்லை என்ற நிலையில் இந்தியாவின் ரன் குவிப்பினால் ஆஸ்திரேலியா வெலவெலத்து போனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜாவும், மார்கஸ் ஹாரிசும் தொடர்ந்து பேட் செய்தனர். சிறிது நேரம் ஆடிய கவாஜா 27 ரன்களில் குல்தீப் யாதவின் சுழலில் கேட்ச் ஆனார்.

ஹாரிஸ் 79 ரன்

அடுத்து ஹாரிசுடன், ஆல்–ரவுண்டர் மார்னஸ் லபுஸ்சானே இணைந்தார். இவர்கள் இந்திய பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்களை திரட்டினர். குல்தீப் யாதவின் ஒரே ஓவரில், ஹாரிஸ் 3 பவுண்டரிகளை விரட்டியடித்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பிறகு ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு கொஞ்சம் எடுபடத் தொடங்கியது. இதனால் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை இந்திய கேப்டன் விராட் கோலி அதிகமாக பயன்படுத்தினார். அதற்கு பலனும் கிடைத்தது.

இந்த தொடரில் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை ஹாரிஸ் பெறுவார் என்று அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அவருக்கு ஜடேஜா ‘செக்’ வைத்தார். அவருக்கு பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. ஹாரிஸ் 79 ரன்களுடன் (120 பந்து, 8 பவுண்டரி) நடையை கட்டினார்.

மழையால் பாதிப்பு

அதைத் தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகள் சரிந்தன. ஷான் மார்ஷ் 8 ரன்னிலும், லபுஸ்சானே 38 ரன்னிலும் (95 பந்து, 7 பவுண்டரி), டிராவிஸ் ஹெட் 20 ரன்னிலும், கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர்.

அப்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களுடன் பரிதவித்தது. பாலோ–ஆனை தவிர்க்க மொத்தம் 423 ரன்கள் எடுத்தாக வேண்டிய சூழலில் 7–வது விக்கெட்டுக்கு பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப்பும், கம்மின்சும் கைகோர்த்து விக்கெட் சரிவை தடுத்து, ஒரு மணி நேரம் சமாளித்தனர்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 83.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால், அத்துடன் 3–வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஹேன்ட்ஸ்கோம்ப் 28 ரன்களுடனும் (91 பந்து, 3 பவுண்டரி), கம்மின்ஸ் 25 ரன்களுடனும் (41 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருக்கிறார்கள். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். மழையால் நேற்றைய தினம் 16.3 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டது.

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

முதல் இன்னிங்சில் இந்தியாவை விட ஆஸ்திரேலிய அணி இன்னும் 386 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. பாலோ–ஆனை தவிர்க்க மேற்கொண்டு 187 ரன்கள் எடுத்தாக வேண்டும். அதனால் இந்த டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் நமது அணி டெஸ்ட் தொடரை முதல்முறையாக வெல்லப்போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

இன்றைய 4–வது நாள் ஆட்டம் அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும்.

இளஞ்சிவப்பு நிறமாக மாறிய சிட்னி மைதானம்

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிட்னி டெஸ்டில் நேற்றைய தினம் பெரும்பாலான ரசிகர்கள் இளஞ்சிவப்பு நிற (பிங்க்) உடை அணிந்து வந்திருந்தனர். ஸ்டம்பு மற்றும் மைதானத்தின் எல்லைக்கோடும் இளஞ்சிவப்பு நிறமாக காட்சி அளித்தன.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத்தின் மனைவி ஜேன், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2008–ம் ஆண்டில் மரணம் அடைந்தார். அவரது நினைவாக அறக்கட்டளை தொடங்கிய மெக்ராத், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் அது தொடர்பான சிகிச்சைக்கு உதவிகரம் நீட்டுவதில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். அதன் ஒரு பகுதியாக சிட்னி டெஸ்டின் 3–வது நாளை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பயன்படுத்திக் கொண்டார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர், இரண்டு அணி வீரர்களுக்கும் இளஞ்சிவப்பு நிற தொப்பியை வழங்கினார். இந்த டெஸ்டின் மூலம் தனது அறக்கட்டளைக்கு ரூ.14½ கோடி நலநிதி திரட்ட திட்டமிட்டுள்ளார். ரசிகர்களும் நன்கொடை வழங்கி வருகிறார்கள்.

நேர்மையாக நடந்து கொண்ட ராகுல்: நடுவர் பாராட்டு

இந்த இன்னிங்சின் 15–வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை மார்கஸ் ஹாரிஸ் ‘மிட்–ஆன்’ திசையில் தூக்கி அடிக்க, இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஓடி வந்து பாய்ந்து விழுந்து பிடித்தார். ஜடேஜா, கோலி மகிழ்ச்சியில் திளைக்க, உடனடியாக அது சரியான கேட்ச் அல்ல, தரையில் பிட்ச் ஆனதும் பிடித்தேன் என்று சைகை மூலம் ராகுல் காட்டினார். இதை கண்ட நடுவர் இயான் கவுல்டு கட்டை விரலை உயர்த்தி, அவரை பாராட்டினார். அது மட்டுமின்றி அந்த ஓவர் முடிந்ததும் ராகுலை அழைத்து, ‘பணியை சிறப்பாக செய்தீர்கள்’ என்று கூறி புகழ்ந்தார். களத்தில் நேர்மையாக நடந்து கொண்ட ராகுலின் செயலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் அந்த வீடியோ காட்சியை வெளியிட்டு பாராட்டியுள்ளது.

பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில், விராட் கோலி கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் தரையோடு பிடித்து விட்டு, அது துல்லியமான கேட்ச் என்று வாதிட்டார். டி.வி. ரீப்ளேயிலும் பந்தை அவர் தரையோடு அள்ளுவது போன்றே தெரிந்தது. பெரும் குழப்பத்திற்கு மத்தியில் கோலிக்கு நடுவர் அவுட் வழங்கினார். ராகுலின் செயல், ஹேன்ட்ஸ்கோம்புக்கு பாடம் கற்பிப்பது போல் அமைந்துள்ளதாக, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.