2–வது டெஸ்டிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை


2–வது டெஸ்டிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா பிளிஸ்சிஸ் ஒரு போட்டியில் விளையாட தடை
x
தினத்தந்தி 6 Jan 2019 10:00 PM GMT (Updated: 6 Jan 2019 8:50 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 2–0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

கேப்டவுன்,

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரையும் 2–0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

டெஸ்ட் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 3–ந்தேதி கேப்டவுனில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 177 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 431 ரன்களும் எடுத்தன. 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3–வது நாள் நிறைவில் 294 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்காவுக்கு 41 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க அணி எளிய இலக்கை 9.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சீரற்ற இந்த ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆனது. முகமது அமிர் வீசிய ஒரு பந்து, அம்லாவின் (2 ரன்) கையை தாக்கியதால் காயத்துடன் வெளியேறினார். டீன் எல்கர் 24 ரன்களும் (நாட்–அவுட்), டி புருன் 4 ரன்னும், கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 3 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் கேப்டன் கருத்து

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்க அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி கண்டு இருந்தது. உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக வென்ற 7–வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘முதல் இன்னிங்சில் நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. 250 முதல் 300 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் கடைசி இன்னிங்சிலும் இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உதவிகரமாக இருந்தது. முதல் பகுதியிலேயே 5 விக்கெட்டுகளை இழந்ததால், அதன் பிறகு சரிவில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது. இந்த போட்டியில் இருந்து எங்களது பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 2 அல்லது 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி இருந்தால் இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு சரியாக இருந்திருக்கும். ஆனால் ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடினோம்’ என்றார்.

பிளிஸ்சிஸ்க்கு தடை

இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதால் தென்ஆப்பிரிக்க அணி சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்க்கு 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ்டில் விளையாட தடையும் போட்டி நடுவர் விதித்தார். ஒரு ஆண்டுக்குள் 2–வது முறையாக இது போன்ற பிரச்சினையில் சிக்கினால், இத்தகைய நடவடிக்கை பாயும். பிளிஸ்சிஸ் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி 13 முதல் 17–ந்தேதி வரை செஞ்சூரியனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டின் போது மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கி இருந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக வருகிற 11–ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கும் 3–வது மற்றும் கடைசி டெஸ்டில் பிளிஸ்சிஸ் ஆட முடியாது. அவருக்கு பதிலாக அம்லா, டீன் எல்கர், மார்க்ராம் ஆகியோரில் ஒருவர் அணியை வழிநடத்துவர்.


Next Story