கிரிக்கெட்

வெளிநாட்டிற்கு மாற்றம் இல்லை: 12-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு + "||" + No change abroad: 12th IPL Competition takes place in India - Cricket Board Announcement

வெளிநாட்டிற்கு மாற்றம் இல்லை: 12-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

வெளிநாட்டிற்கு மாற்றம் இல்லை: 12-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடைபெறும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் முழுமையாக நடக்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஏனெனில் அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தொடக்க கட்ட போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே 2009-ம் ஆண்டு தேர்தலின் போது ஐ.பி.எல். போட்டி முழுமையாக தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 2014-ம் ஆண்டு தேர்தலையொட்டி முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தன.


இந்த நிலையில் 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது, எங்கு நடத்துவது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியினர் டெல்லியில் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இது சம்பந்தமாக அரசு தரப்பு, போலீஸ் மற்றும் தேர்தல் கமிஷனிடமும் கருத்து கேட்டனர். அதன் அடிப்படையில் இந்த ஐ.பி.எல். போட்டியை இந்தியாவிலேயே நடத்துவது என்றும், போட்டியை மார்ச் 23-ந்தேதி தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

போட்டி அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மாநில கிரிக்கெட் சங்கங்கள், அணி உரிமையாளர்கள் மற்றும் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு போட்டி அட்டணை வெளியிடப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாதத்திலேயே ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிக்கும் அடுத்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் (மே 30-ந்தேதி தொடக்கம்) குறைந்தது 15 நாட்கள் இடைவெளி விட வேண்டும் என்பது லோதா கமிட்டியின் பரிந்துரையாகும். இதனாலேயே, இந்த ஐ.பி.எல். தொடர் முன்கூட்டியே தொடங்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், அதற்கு ஏற்றவாறு ஐ.பி.எல். போட்டி தேதி மற்றும் இடங்கள் முடிவு செய்யப்படும். தேர்தல் மற்றும் பிரசாரம் காரணமாக குறிப்பிட்ட மாநிலங்களில் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் தயாராக இருப்போம் என்று நிர்வாக கமிட்டி சேர்மன் வினோத் ராய் தெரிவித்தார்.