இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் - மார்ஷ் சகோதரர்கள் நீக்கம்


இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் - மார்ஷ் சகோதரர்கள் நீக்கம்
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 10:04 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் சகோதரர்கள் நீக்கப்பட்டனர்.

மெல்போர்ன்,

தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும்.

இந்த போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக பறிகொடுத்ததுடன், ஒரு வீரர் கூட சதம் அடிக்காததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இந்திய டெஸ்ட் தொடரில் சொதப்பிய ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் ஆகியோர் கழற்றி விடப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக மேட் ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் மற்றும் புதுமுகம் வில் புகோஸ்வி ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

20 வயதான புகோஸ்வி சமீபத்தில் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 243 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் பலனாக அவருக்கு முதல்முறையாக தேசிய அணிக்குள் நுழையும் அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது.

தேர்வு குழு தலைவர் டிரெவோர் ஹான்ஸ் கூறுகையில், ‘பிஞ்ச், ஹேன்ட்ஸ்கோம்ப், மார்ஷ் சகோதரர்கள் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. அவர்கள் 4 பேரும் மிகச்சிறந்த வீரர்கள். நீக்கப்பட்டதால், அவர்கள் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு வர முடியாது என்று அர்த்தம் அல்ல. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இந்த 4 பேரும் இடம் பெற்று இருக்கிறார்கள். தற்போது 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராவதில் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வருமாறு:-

டிம் பெய்ன் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஜோ பர்ன்ஸ், கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சானே, நாதன் லயன், புகோஸ்வி, ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில்.


Next Story