கிரிக்கெட்

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கம் - ஆஸ்திரேலிய தொடரில் விளையாட முடியாது + "||" + Controversy regarding women: Harik Pandya, Lokesh Rahul suspended - Can not play in the Australian series

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கம் - ஆஸ்திரேலிய தொடரில் விளையாட முடியாது

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இடைநீக்கம் - ஆஸ்திரேலிய தொடரில் விளையாட முடியாது
பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,

டி.வி. நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அவர்கள் தாயகம் திரும்புகிறார்கள்.


இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவிஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஹர்திக் பாண்ட்யா, இரவு கிளப் அனுபவம் குறித்தும், பல பெண்களுடன் ஊர் சுற்றியது பற்றியும், தனது செக்ஸ் அனுபவங்களை குடும்பத்தினரிடம் மறைப்பது கிடையாது என்றும் வெளிப்படையாக பேசினார். அவருடன் இணைந்து இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் ராகுலும் பெண்களை தவறான கோணத்தில் சித்தரித்து சர்ச்சையில் சிக்கினார்.

நீங்கள் இருவரும் (ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல்) ஒரே பெண்ணை விரும்பினால் என்ன செய்வீர்கள் என்று நிகழ்ச்சியில் லோகேஷ் ராகுலிடம் கேட்ட போது, ‘அது அந்த பெண்ணின் முடிவை பொறுத்தது’ என்றார். அப்போது குறுக்கிட்ட ஹர்திக் பாண்ட்யா யாருக்கு திறமை இருக்கிறதோ அவர் அந்த பெண்ணை வசப்படுத்தலாம் என்று பதிலளித்தார்.

இப்படி ஜாலியாக பேசுகிறோம் என்று நினைத்து கண்டபடி இருவரும் உளறிய விஷயம் பெருத்த சர்ச்சையாக வெடித்ததுடன், அவர்கள் இருவரையும் கடுமையான சிக்கலில் மாட்டி விட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரையும் கண்டித்த இந்திய கிரிக்கெட் வாரியம் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து அவர்கள் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்தனர்.

இந்திய கிரிக்கெட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய இந்த விஷயத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய கவுரவ பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளது. இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் வற்புறுத்தினார்கள். ‘இரண்டு வீரர்களின் கருத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் நேற்று முன்தினம் கூறுகையில் ‘சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த இருவருக்கும் 2 ஒருநாள் போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து இருக்கிறேன். நிர்வாக கமிட்டியில் இடம் பெற்றுள்ள மற்றொரு உறுப்பினரான டயானா எடுல்ஜி இதற்கு ஒப்புக்கொண்டால் இறுதி முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்’ என்றார். ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டப்பிரிவின் கருத்தை கேட்டு இறுதி முடிவு எடுக்கலாம்’ என்று டயானா எடுல்ஜி தெரிவித்தார். அதற்கு வினோத் ராயும் சம்மதித்தார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டப்பிரிவு வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத நிலையில் இரு வீரர்களையும் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யலாம் என்று டயானா எடுல்ஜி பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘இது தொடர்பான விசாரணை முடியும் வரை ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகிய இருவரும் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்’ என்று அதிரடியாக அறிவித்தார். இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர்கள் உடனடியாக நீக்கப்பட்டனர். ஓரிரு நாட்களில் அவர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறினார். அவர்களுக்கு பதிலாக ரிஷாப் பான்ட், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் இருவர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

இனி, ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இருவருக்கும் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பிறகு விசாரணை நடத்தி தண்டனை குறித்து இறுதி முடிவு மேற்கொள்ளப்படும். எனவே அடுத்து நடக்கும் நியூசிலாந்து தொடரிலும் அவர்கள் ஆடுவது சந்தேகம் தான்.

இதற்கிடையே ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியின் தொகுப்பை ‘ஆன்-லைன்’ மூலம் பார்க்க பலரும் ஆர்வம் காட்டினர். ‘ஹாட்ஸ்டாரில்’ இருந்து இந்த நிகழ்ச்சியின் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

83 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இருவர் மீதும் ஒழுங்கீன நடவடிக்கையாக, ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து பாதியில் நாட்டுக்கு திருப்பி அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு வெளிநாட்டில் நமது வீரர்கள் சர்ச்சையில் சிக்கிய சம்பவங்கள் பல நடந்தாலும், ஒழுங்கீன நடத்தைக்காக போட்டியின் பாதியிலேயே விரட்டப்படுவது இது 2-வது முறையாகும்.

முந்தைய நிகழ்வு சுதந்திரத்திற்கு முன்பு அதாவது 1936-ம் ஆண்டு நடந்தது. அப்போது இந்திய அணி விஜயநகரம் மகாராஜா தலைமையில் இங்கிலாந்துக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் போது இந்திய கேப்டனுக்கு கட்டுப்பட மறுத்ததாக கூறி சக வீரர் லாலா அமர்நாத்தை, தாயகத்திற்கு திருப்பி அனுப்பினர்.