இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - சிட்னியில் இன்று நடக்கிறது


இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - சிட்னியில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 11 Jan 2019 11:45 PM GMT (Updated: 11 Jan 2019 11:03 PM GMT)

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.

சிட்னி,

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது.

அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

மே மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னோட்டமாக இந்த ஒரு நாள் தொடர் கருதப்படுவதால் இரு அணி வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள். உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடு அமையும் என்று நம்பலாம்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை ருசித்த முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்ற இந்திய அணியினர், மிகுந்த நம்பிக்கையுடன் ஒரு நாள் போட்டியில் களம் இறங்குவார்கள். டெஸ்ட் தொடரில் ஆடாத ஷிகர் தவான், கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார் மற்றும் மூத்த வீரர் டோனி உள்ளிட்டோர் ஒரு நாள் போட்டியில் அடியெடுத்து வைக்கிறார்கள். கடந்த ஆண்டு ஆடிய 20 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காத டோனி மிகுந்த நெருக்கடியில் தவிக்கிறார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் அசத்தி வருவதால், 37 வயதான டோனி தனது இடத்தை காப்பாற்ற கொஞ்சமாவது சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் துணை கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நல்ல தொடக்கம் அமைத்து தந்தால், நமது அணி சவாலான ஸ்கோரை எட்ட முடியும். ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் விராட் கோலி ரன்மழை பொழிவார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லி விழிபிதுங்கி நிற்கும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் இருவரும் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். இந்த விஷயம் இந்திய அணிக்கு கவனச்சிதறலை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பாண்ட்யாவுக்கு பதிலாக சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெற வாய்ப்புள்ளது.

டெஸ்ட் தொடரை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் தொடரில் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எந்த ஒரு சர்வதேச தொடரையும் வென்றதில்லை. கடைசியாக ஆடிய 24 ஒரு நாள் போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாமல் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி, வெற்றிப்பாதைக்கு திரும்ப போராடிக்கொண்டிருக்கிறது.

இந்த தொடரை வென்றால் அது உள்ளூர் ரசிகர்களை உற்சாகமான மனநிலைக்கு கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்துள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அதற்காக எல்லா வகையிலும் மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிசின் வருகை ஆஸ்திரேலியாவின் பலத்தை சற்று அதிகப்படுத்தியுள்ளது. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் பீட்டர்சிடில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்புகிறார். மொத்தத்தில் வலுவான அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. அதன் பிறகு சில நாட்கள் மழை பெய்தது. ஆனால் இன்று மழை வாய்ப்பு இல்லை என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும் என்று தெரிகிறது.

சிட்னியில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 16 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 13-ல் ஆஸ்திரேலியாவும், 2-ல் இந்தியாவும் வெற்றி பெற்றன. மழையால் ஒரு போட்டியில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, முகமது ஷமி.

ஆஸ்திரேலியா:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் காரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்ட்சன், ஜாசன் பெரென்டோர்ப்.

இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் இதுவரை...

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை 128 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 73-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 10 ஆட்டங்களில் முடிவில்லை.

ஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகளும் சந்தித்த 48 ஒரு நாள் போட்டிகளில் 35-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி கண்டன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

ஒரு நாள் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் உலக கோப்பை உள்பட இதுவரை 12 போட்டித் தொடர்களில் பங்கேற்று இருக்கிறது. இதில் 1985-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் மற்றும் 2008-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் மட்டும் இந்திய அணி வாகை சூடியது. கடைசியாக 2016-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி 1-4 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

தரவரிசையில் மாற்றம் வருமா?

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இந்த தொடரில் இந்திய அணி ஜெயித்தாலும், தோற்றாலும் அதன் தரவரிசையில் மாற்றம் இருக்காது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணி தொடரை வசப்படுத்தினால், தரவரிசையில் ஒரு இடம் முன்னேறும். இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story