ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி - ரோகித் சர்மாவின் சதம் வீண்


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி - ரோகித் சர்மாவின் சதம் வீண்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:35 PM GMT (Updated: 12 Jan 2019 11:35 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா சதம் விளாசியும் பலன் இல்லை.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

அடுத்ததாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், கேதர் யாதவ் சேர்க்கப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் பெரென்டோர்ப், ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஆரோன் பிஞ்சும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரியும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். பிஞ்ச் (6 ரன்), புவனேஷ்வர்குமார் வீசிய இன்ஸ்விங்கரில் போல்டு ஆனார். அடுத்து உஸ்மான் கவாஜா இறங்கினார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் அவசரம் காட்டாமல் எச்சரிக்கையான அணுகுமுறையை கையாண்டனர். இதனால் ரன்வேகம் சீராகவே நகர்ந்தது. அலெக்ஸ் காரி 24 ரன்களில், குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரோகித்திடம் கேட்ச் ஆனார்.

அதைத் தொடர்ந்து கவாஜாவுடன், ஷான் மார்ஷ் கைகோர்த்தார். ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எடுப்பதில் அதிக கவனம் செலுத்திய இவர்கள் 22.5 ஓவர்களில் அணியின் ஸ்கோரை 100 ரன்களை எட்ட வைத்தனர். இருவரும் அரைசதத்தையும் கடந்தனர்.

ஸ்கோர் 133 ரன்களாக உயர்ந்த போது, கவாஜா 59 ரன்களிலும் (81 பந்து, 6 பவுண்டரி), ஷான் மார்ஷ் 54 ரன்களிலும் (70 பந்து, 4 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர்.

இதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் ரன்விகிதம் சற்று குறைந்தது. 37 முதல் 44 ஓவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 பந்துகளில் பந்து எல்லைக்கோடு பக்கமே போகவில்லை.

இறுதி கட்டத்தில் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மட்டையை அதிரடியாக சுழட்டி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வழிவகுத்தார். இன்னொரு பக்கம், சிறிது நேரம் தடுமாறிய மார்கஸ் ஸ்டோனிசும், கடைசி நேரத்தில் சில வலுவான ஷாட்டுகளை அடித்தார். ஹேன்ட்ஸ்கோம்ப் 73 ரன்களில் (61 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. ஸ்டோனிஸ் 47 ரன்களுடனும் (43 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), மேக்ஸ்வெல் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அந்த அணி கடைசி 7 ஓவர்களில் 80 ரன்களை திரட்டியது கவனிக்கத்தக்கது.

தொடர்ந்து 289 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களம் புகுந்தனர். இந்தியா இப்படியொரு மோசமான தொடக்கத்தை காணும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஷிகர் தவான் (0) சந்தித்த முதல் பந்திலேயே பெரென்டோர்ப்பின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (3 ரன்), ஜெயே ரிச்சர்ட்சனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். லெக்-சைடில் வந்த பந்தை அடித்த போது, ஸ்கொயர் லெக் திசையில் நின்ற ஸ்டோனிசிடம் பிடிபட்டார். ஏற்கனவே டெஸ்ட் போட்டியிலும் இதே போன்று ஆட்டம் இழந்த அவரை, சரியாக திட்டமிட்டு காலி செய்து விட்டனர். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய அம்பத்தி ராயுடு (0) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. இதனால் 4 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி ஊசலாடியது.

இதன் பின்னர் துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன், விக்கெட் கீப்பர் டோனி இணைந்தார். அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக இருவரும் பொறுமையாக ஆடினர். வேகப்பந்து வீச்சாளர்கள் பெரென்டோர்ப்பும், ஜெயே ரிச்சர்ட்சன்சும் நேர்த்தியாக பந்து வீசி, குடைச்சல் கொடுத்த போதிலும் சமாளித்துக் கொண்டனர். முதல் 13 ஓவர்களில் வெறும் 26 ரன்களே நமது அணி எடுத்திருந்தது. அதன் பிறகு சற்று துரிதமாக ரன்கள் எடுக்க தொடங்கினர். சிடில், லயனின் பந்து வீச்சில் ரோகித் சர்மா சூப்பராக சிக்சர் அடித்தார். டோனியும் தனது பங்குக்கு லயனின் சுழலில் ஒரு சிக்சர் விரட்டினார். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் முதல் 20 ஓவர்களில் இந்திய தரப்பில் யாரும் பவுண்டரி அடிக்கவில்லை. 25.2 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது.

டோனி நிலைத்து நின்று ஆடினாரே தவிர, அவரது பேட்டிங்கில் வேகமில்லை. 93 பந்துகளில் தனது 68-வது அரைசதத்தை நிறைவு செய்தார். ஓராண்டுக்கு பிறகு அரைசதம் எடுத்த அவர், தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஸ்கோர் 141 ரன்களை எட்டிய போது, டோனி (51 ரன், 96 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெரென்டோர்ப்பின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். டி.வி. ரீப்ளேயில், லைனுக்கு வெளியே லெக்-சைடில் பந்து பிட்ச் ஆவது தெரிந்தது. அப்பீல் செய்திருந்தால் முடிவு மாறியிருக்கும். ஆனால் இருந்த ஒரே டி.ஆர்.எஸ். வாய்ப்பையும் அம்பத்தி ராயுடு வீணடித்து விட்டதால் டோனி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

பெரென்டோர்ப்பும், ஜெயே ரிச்சர்ட்சனும், ஸ்டம்பை குறி வைத்து அவ்வப்போது வேகத்தை குறைத்து பந்து வீசி வெகுவாக நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ரிச்சர்ட்சன் ஒரு பவுண்டரி கூட விட்டுக்கொடுக்காமல் அசத்தினார். டோனிக்கு பிறகு வந்த தினேஷ் கார்த்திக் 12 ரன்னில் வெளியேறியது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மறுமுனையில் தனி வீரராக போராடிய ரோகித் சர்மா, பீட்டர்சிடிலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்த அவர், சில சிக்சர்களும் விரட்டினார். அவரை மட்டுமே அணி நம்பி இருந்த நிலையில், 46-வது ஓவரில் அவர் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 133 ரன்களில் (129 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனதும், இந்திய அணியின் நம்பிக்கையும் தகர்ந்து போனது.

50 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்து, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 22 வயதான ஜெயே ரிச்சர்ட்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

ஆயிரம் வெற்றிகளை பெற்று ஆஸ்திரேலியா சாதனை

* சிட்னியில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) ஆஸ்திரேலியாவின் ஆயிரமாவது வெற்றி இதுவாகும். அந்த அணி டெஸ்டில் 384 வெற்றிகளும், ஒரு நாள் போட்டியில் 558 வெற்றிகளும், 20 ஓவர் கிரிக்கெட்டில் 58 வெற்றிகளும் பெற்றுள்ளன. இந்த மைல்கல்லை எட்டிய முதல் அணி ஆஸ்திரேலியா தான். இந்த வகையில் 2-வது இடத்தில் இங்கிலாந்தும் (774 வெற்றி), 3-வது இடத்தில் இந்தியாவும் (711), 4-வது இடத்தில் பாகிஸ்தானும் (702) உள்ளன.

* இந்திய வீரர்களில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (38 சதம்) ஆகியோருக்கு அடுத்துள்ள சவுரவ் கங்குலியை ரோகித் சர்மா (தலா 22 சதம்) நேற்று சமன் செய்தார்.

* இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சின் விக்கெட்டை வீழ்த்திய போது அது அவரது 100-வது விக்கெட்டாக (96 ஆட்டம்) அமைந்தது. 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 19-வது இந்தியர் புவனேஷ்வர்குமார் ஆவார்.

* ரோகித் சர்மா, ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 64 சிக்சர்கள் நொறுக்கியிருக்கிறார். இதன் மூலம் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சிறப்பை ரோகித் பெற்றுள்ளார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் அப்ரிடி, இலங்கைக்கு எதிராக 63 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

* இந்திய விக்கெட் கீப்பர் டோனி இந்த ஆட்டத்திற்கு முன்பாக, ஒரு நாள் கிரிக்கெட்டில் மொத்தம் 10,173 ரன்கள் சேர்த்து இருந்தார். இதில் இந்திய அணிக்காக 9,999 ரன்களும், ஆசிய அணிக்காக 174 ரன்களும் எடுத்திருந்தார். ஆக, நேற்றைய ஆட்டத்தில் ஒரு ரன் எடுத்த போது, இந்திய அணிக்காக 10 ஆயிரம் ரன்கள் எட்டிய 5-வது இந்தியர் என்ற பெருமையை டோனி பெற்றார்.

ரோகித் சர்மாவின் துரதிர்ஷ்டம்

சிட்னி ஆட்டத்தில் மூன்று இலக்கத்தை கடந்த 31 வயதான ரோகித் சர்மாவுக்கு இது 22-வது சதமாக அமைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது சதமாகும். இதில் ஆஸ்திரேலிய மண்ணில் எடுத்த 4 சதங்களும் (2015-ம் ஆண்டு மெல்போர்ன்-138 ரன், 2016-ம் ஆண்டில் பெர்த்-171 ரன், பிரிஸ்பேன்-124 ரன், இப்போது சிட்னி-133 ரன்) அடங்கும். ரோகித் சர்மாவின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் அவர் அந்த நாட்டு அணிக்கு எதிராக 100 ரன்களை கடந்த 4 போட்டிகளிலும் இந்தியாவுக்கு தோல்வியே கிடைத்திருக்கிறது.



Next Story