கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது + "||" + Will India retaliate to Australia

ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது

ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடக்கிறது.
அடிலெய்டு, 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிலெய்டில் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி முதலாவது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அரை சதம் அடித்தனர். மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டம் இழக்காமல் 47 ரன்கள் சேர்த்தார். பந்து வீச்சில் ஜெயே ரிச்சர்ட்சன், ஜாசன் பெரென்டோர்ப், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இருந்தது.

முதலாவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் உள்பட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். ரோகித் சர்மா (133 ரன்கள்) அடித்த சதம் அணிக்கு பலன் அளிக்கவில்லை. டோனி 96 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள் (3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தார். அவரது மெதுவான ஆட்டம் அணியின் விக்கெட் சரிவை தடுக்க உதவியதே தவிர ரன் இலக்கை எட்ட வழிவகுப்பதாக அமையவில்லை.

டோனி நல்ல பார்முக்கு திரும்ப வேண்டியது இந்திய அணிக்கு அவசியமானதாகும். ஆட்டம் இழக்காமல் 29 ரன்கள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் 66 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவர் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தது அணிக்கு கடினமானதாக அமைந்தது. 21 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக கேதர் ஜாதவ் அணியில் இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? போராட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறாவிட்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணியினர் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக எல்லா வகையிலும் வரிந்து கட்டும். எனவே இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 129 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 74 ஆட்டங்களிலும், இந்தியா 45 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. ஆஸ்திரேலிய மண்ணில் இவ்விரு அணிகளும் சந்தித்த 49 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 36 ஆட்டங்களிலும், இந்திய அணி 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுடன் மோதி உள்ளது. அதில் முதல் 4 ஆட்டங்களில் இந்திய அணி தோல்வி கண்டது. கடைசியாக 2012-ம் ஆண்டில் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு அணியின் உத்தேச வீரர்கள் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ் அல்லது தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது அல்லது முகமது சிராஜ், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் காரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், பீட்டர் சிடில், ஜெயே ரிச்சர்ட்சன், நாதன் லயன், ஜாசன் பெரென்டோர்ப்.

இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.