கிரிக்கெட்

சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு + "||" + Virat Kohli is the leader of achievements Appreciate the former giants

சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு

சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு
சாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி, சமீப காலமாக சாதனைகளை வாரிக் குவிக்கும் நாயகனாக திகழ்ந்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 39-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதனை 210 இன்னிங்சில் கோலி அடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது, விராட் கோலி அடித்த 24-வது சதம் ஆகும். 39-வது சதத்தை பூர்த்தி செய்ய, சச்சினுக்கு 350 இன்னிங்ஸ் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோலியின் சாதனைகளை நோக்கும் போது, ஜனவரி 15-ஆம் தேதி மிகவும் பிடித்தமானது என்றே தோன்றுகிறது. தற்போது தொடர்ந்து 3-வது ஆண்டாக இதே நாளில் கோலி சதம் விளாசியுள்ளார். கடந்த 2017 ஜனவரி 15-ல் ஒருநாள் போட்டியில் சதம், 2018 ஜனவரி 15-ல் டெஸ்ட் போட்டியில் சதம், 2019 ஜனவரில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அடித்த ஒட்டுமொத்த சதங்களின் பட்டியலில் கோலி 3-வது இடத்தில் உள்ளார். சச்சின் 100 சதங்கள், ரிக்கி பாண்டிங் 71 சதங்கள், சங்காக்கரா 63 சதங்கள் அடித்துள்ளனர். வெளிநாடுகளில் அடிக்கப்பட்ட சதங்களின் பட்டியலில் 22 சதங்களுடன் கோலி 2-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 29 சதங்களுடன் சச்சின் இருக்கிறார். 3-வது இடத்தில் ஜெயசூர்யா மற்றும் சங்கக்கரா ஆகியோர் 21 சதங்கள் அடித்துள்ளனர். ஒருநாள் போட்டி  ரன்களில் 11-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இலங்கையைச் சேர்ந்த தில்ஷனின் 10,290 ரன்களை கடந்துள்ளார். இந்த ரன்களை  குவிக்க தில்ஷனுக்கு 303 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. ஆனால் கோலி 210 இன்னிங்சில் எடுத்துள்ளார்.

விரைவில் டாப் 10 பேட்ஸ்மேன்களின் சாதனைகளை தகர்த்து எறிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10-வது இடத்தில் 10,405 ரன்களுடன் பிரைன் லாரா உள்ளார். முதல் 10 இடங்களில் இருக்கும்  அனைவரும் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து விராட் கோலி அதிக சதங்களை அடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 2017-ல் இருந்து 42 இன்னிங்சில் 12 சதங்களை அடித்திருந்தார். ஆனால் கோலி 42 இன்னிங்சில் 13 சதங்களை அடித்துள்ளார். 2-வது விக்கெட் ஜோடியான கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 4117 ரன்கள் எடுத்துள்ளனர். முன்னதாக சச்சின், டிராவிட் இணைந்து 4117 ரன்கள் எடுத்திருந்தனர். இவர்களை விட, குறைந்த இன்னிங்சில் கோலி, ரோஹித் இணை சாதனை செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அவரது ஆட்டத்தைக் கண்டு வியந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர், சச்சின் தெண்டுல்கரும், விராட் கோலியும் தனது அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். சச்சின் ஒரு அசாத்திய கிரிக்கெட் வீரர் என்று குறிப்பிட்ட லேங்கர், அவரது சாதனைகள் ஒப்பற்றவை என்று கூறியுள்ளார்.

சச்சினைப் போலவே விராட் கோலியும் விளையாடுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கோலியின் விளையாட்டு திறன் நம்ப முடியாத வகையில் இருப்பதாகவும் வியந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 100 சதங்கள் அடிப்பார் என  இந்திய அணியின்  முன்னாள்  கேப்டன் முகமது அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விராட் கோலியை பொறுத்தவரை அவர் பல ஜாம்பவான்களுக்கு முன்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது விளையாடும் திறன் மிகவும் அற்புதமாக இருப்பதாக கூறியுள்ள முகமது அசாருதீன், விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்று புகழ்ந்துள்ளார். இனி வரும் காலங்களிலும் நல்ல உடற்தகுதியை விராட் கோலி பெற்றிருக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதத்தை அடிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 100 சதம் அடித்த ஒரே வீரர் என்ற வரலாறை சச்சின் தெண்டுல்கர் மட்டுமே படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார்.
2. அவரை தீவிரவாதி என்றுதான் அழைப்போம் - தோனி குறித்து அவரது நண்பர் தகவல்
அவரை தீவிரவாதி என்றுதான் அழைப்போம் - தோனி குறித்து அவரது பீகார் அணி நண்பரான சத்ய பிரகாஷ் தகவல் தெரிவித்து உள்ளார்.
3. அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர்
அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டி உள்ளார் கவுதம் கம்பீர்
4. அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி ஷேன் வாட்சன்
கடந்த சில தினங்களாக தனக்கு பாராட்டுகளையும், அன்பையும் அளித்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
5. இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் கிரிக்கெட் வீரர்கள் கருத்து
வன்முறையை உருவாக்குபவர்கள் தீவிரவாதிகள் எனவும் அவர்கள் இலங்கையை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்வதாகவும் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.