கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: டோனி, புவனேஷ்வர்குமாருக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு + "||" + India win 2nd ODI against Australia: Dhoni, Bhuvneshwar Kumar Captain Virat Kohli to praise

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: டோனி, புவனேஷ்வர்குமாருக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: டோனி, புவனேஷ்வர்குமாருக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, புவனேஷ்வர்குமார் ஆகியோரை கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.
அடிலெய்டு,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று முன்தினம் நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் 6 ரன்னிலும், அலெக்ஸ் காரி 18 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜாவுடன் இணைந்தார். ஷான் மார்ஷ் நிலைத்து நின்று அடித்து ஆடி ரன் சேர்த்தார். அவருடன் ஆடிய உஸ்மான் கவாஜா 21 ரன்னிலும், ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோனிஸ் 29 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.


6-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ்சுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடியதால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஷான் மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரியுடன் தனது 7-வது சதத்தை எட்டினார். இருவரும் ஆடிய விதத்தை பார்க்கையில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய வீரர் புவனேஷ்வர்குமார் 48-வது ஓவரில் தனது அபாரமான வேகப்பந்து வீச்சின் மூலம் இருவரின் வேகத்துக்கும் முட்டுக்கட்டை போட்டார். மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 48 ரன்னும், ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 131 ரன்னும் எடுத்து ஒரே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 300 ரன்னுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது.

50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. நாதன் லயன் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஷிகர் தவான் 28 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 32 ரன்னும், ரோகித் சர்மா 52 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு 36 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனை அடுத்து டோனி, விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடினார்கள். நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய விராட்கோலி 108 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 39-வது சதம் இதுவாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 6-வது சதம் இது.

அணியின் ஸ்கோர் 242 ரன்னாக உயர்ந்த போது விராட்கோலி (104 ரன்கள், 112 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஜெயே ரிச்சர்ட்சன் பந்து வீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக், டோனியுடன் இணைந்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 38 பந்துகளில் 57 ரன்கள் தேவைப்பட்டது. இருவரும் பதற்றமின்றி சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்கள்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவையாக இருந்தது. பெரென்டோர்ப் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி நெருக்கடியை போக்கிய டோனி அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் டோனிக்கு வயதாகி விட்டதால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறன் குறைந்து விட்டது என்ற விமர்சனத்துக்கும் அவர் விடை கொடுத்தார்.

49.2 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி 54 பந்துகளில் 2 சிக்சருடன் 55 ரன்னும், தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பெரென்டோர்ப், ஜெயே ரிச்சர்ட்சன், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய ஒருநாள் போட்டி அணியில் 225-வது வீரராக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 76 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டி இருக்கிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மெல்போர்னில் நடக்கிறது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இந்திய அணியில் டோனி அங்கம் வகிக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த ஆட்டத்தில் டோனியின் இன்னிங்ஸ் உன்னதமானது. அவர் ஆட்டத்தை மிகச்சரியாக கணிக்கக்கூடியவர். ஆட்டத்தை முடிவு வரை கொண்டு சென்றார். அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அவர் தேவைப்படும் போது பெரிய ஷாட்களை அடிப்பார். 50 ஓவர்களும் பீல்டிங் செய்து களைப்பானாலும் டோனி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் ஆகியோர் கடைசி வரை நின்றால் ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டில் இருந்து பறித்து விடுவார்கள் என்று நினைத்தோம். அவர்கள் இருவரையும் வீழ்த்தி ரன்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினோம். அதன்படி புவனேஷ்வர்குமார் ஒரே ஒவரில் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்தினார். 299 ரன் இலக்கு என்பது இந்த மைதானத்தில் சவாலானது தான்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவிக்கையில், ‘வலுவான பேட்டிங் வரிசை கொண்ட இந்திய அணிக்கு எதிராக விளையாடுகையில் சீராக விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமானதாகும். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. எனது ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. ஷான் மார்ஷ் அருமையாக ஆடினார். ஜெயே ரிச்சர்ட்சன் பந்து வீச்சு நன்றாக அமைந்தது. நாங்கள் நன்றாக ஆடினாலும் மிடில் ஓவரில் இன்னும் சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

சாதனை துளிகள்...

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சதம் அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 5-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் சங்ககரா (இலங்கை), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோருடன் விராட்கோலி முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 2 சிக்சர் விளாசினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 89 சிக்சர்கள் அடித்துள்ளார். இந்த வகையில் இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 88 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது.

* சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (டெஸ்ட், ஒருநாள்) விராட்கோலி மொத்தம் 64 சதங்களை அடித்து இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கை வீரர் சங்ககராவை (63 சதங்கள்) பின்னுக்கு தள்ளி விராட்கோலி 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் தெண்டுல்கர் (100 சதங்கள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (71 சதங்கள்) ஆகியோர் முறையே முதல் 2 இடங்களில் உள்ளனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...