கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரள அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Ranji Cricket Kerala team progress to semi-fin

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரள அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரள அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரள அணி முதல்முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது.
வயநாடு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால்இறுதி ஆட்டங்கள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் வயநாட்டில் நடந்த கேரளா-குஜராத் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே கேரளா அணி 185 ரன்னும், குஜராத் அணி 162 ரன்னும் எடுத்தன. 23 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கேரள அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 171 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 2-வது இன்னிங்சை ஆடியது. கேரள வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் குஜராத் அணி 31.3 ஓவர்களில் 81 ரன்னில் சுருண்டது. இதனால் கேரளா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராகுல் ஷா 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேரள அணி தரப்பில் பாசில் தம்பி 5 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ரஞ்சி போட்டியில் கேரள அணி அரைஇறுதிக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

உத்தரகாண்ட்-விதர்பா அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் நாக்பூரில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 355 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து இருந்தது. சஞ்சய் 112 ரன்னுடனும், வாசிம் ஜாபர் 111 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

3-வது நாளான நேற்று சஞ்சய், வாசிம் ஜாபர் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். சஞ்சய் 141 ரன்னிலும், இரட்டை சதம் அடித்த வாசிம் ஜாபர் 206 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 559 ரன்கள் குவித்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.