கிரிக்கெட்

‘தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை’ ஷிகர் தவான் பேட்டி + "||" + 'Biggest achievement to win the series' interview with Shikhar Dhawan

‘தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை’ ஷிகர் தவான் பேட்டி

‘தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை’ ஷிகர் தவான் பேட்டி
‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனையாகும்’ என்று தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தெரிவித்தார்.
மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மெல்போர்னில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹர்திக் பாண்ட்யா ஏற்படுத்தும் சமச்சீர் தன்மை நமது அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். கேதர் ஜாதவ் ஆடுகையில் அவருடைய சுழற்பந்து வீச்சு அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவரை எங்களுடைய தங்க கை எனலாம். அவர் எப்பொழுதும் விக்கெட்டை கைப்பற்றுகிறார். பெரிய பார்ட்னர்ஷிப்புகளை அவர் உடைக்கிறார். டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிகளில் ஆல்-ரவுண்டர் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

கலீல் அகமது, முகமது சிராஜ் பந்து வீச்சு குறித்து நாங்கள் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் தற்போது தான் அணிக்கு வந்து இருக்கிறார்கள். இளம் வீரர்களான அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். நல்ல அணிக்கு எதிராக விளையாடும் போது தான் அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் ரன்கள் அதிகம் விட்டுக்கொடுத்தால் தங்களது ஆட்ட யுக்தி குறித்து அதிகம் யோசிக்க வேண்டும். அவர்களுக்கு இங்கு வாய்ப்பு அளித்தது நல்ல விஷயமாகும்.

ஒருநாள் போட்டி தொடரை வெல்வது எங்களுக்கு மிகப்பெரிய விஷயமாகும். டெஸ்ட் தொடரை போல் ஒருநாள் தொடரையும் வென்றால் அது எங்களுக்கு மிகப்பெரிய சாதனையாக அமையும். அதனை மிகப்பெரிய பொக்கிஷமாக கருதி கொண்டாடுவோம். கடைசி ஆட்டத்தில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். டோனி பார்முக்கு திரும்பி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பு வாய்ந்த வீரரான அவர் எதிர்முனையில் ஆடும் வீரருக்கு நல்ல நம்பிக்கை அளிக்கக்கூடியவர். நமது அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் அனுபவமும், மன முதிர்ச்சியும் கொண்டவர்களாக உள்ளனர். நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். அதனால் வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணியாக உருவெடுத்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக நமது அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரோகித் சர்மாவுடன் இணைந்து பேட்டிங் செய்வது எனக்கு சவுகரியமாக உள்ளது. எங்கள் இருவருக்கும் என்ன செய்ய வேண்டும். எதனை செய்யக்கூடாது என்பது தெரியும். எனவே நாங்கள் அதிகம் விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

ஆரோன் பிஞ்ச் விக்கெட்டை விரைவில் வீழ்த்த நாங்கள் திட்டம் வைத்து இருக்கிறோம். முந்தைய ஆட்டங்களை போல் அவருக்கு நேர்த்தியான பந்து வீச்சின் மூலம் ரன் எடுக்க முடியாத வகையில் நெருக்கடி அளிப்போம். ஆஸ்திரேலியா சிறந்த ஆல்-ரவுண்ட் அணியாகும். சிறந்த வீரர்களான ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாதது அவர்களுக்கு இழப்பாகும். புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோர் முதல் 10 ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதேபோல் வரும் ஆட்டத்திலும் செயல்பட விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.