கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்தியா வெல்லுமா? கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது + "||" + Will India win the series against Australia?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்தியா வெல்லுமா? கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இந்தியா வெல்லுமா? கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மெல்போர்னில் நடக்கிறது.
மெல்போர்ன், 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும், அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மெல்போர்னில் நடக்கிறது.

கடந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நேர்த்தியாக செயல்பட்டு 299 ரன் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. அதேபோல் இந்த போட்டியிலும் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடி தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக வென்று இந்திய அணி சமீபத்தில் சரித்திரம் படைத்தது. அதுபோல் ஆஸ்திரேலிய மண்ணில் இரு நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணி முதல்முறையாக கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, கேப்டன் விராட்கோலி, ஷிகர் தவான், டோனி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகியோர் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்ததால் அவர்களில் ஒருவர் நீக்கப்பட்டு தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் ஷான் மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் கேப்டன் ஆரோன் பிஞ்ச், அலெக்ஸ் காரி ஆகியோரின் பேட்டிங் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. முதுகு வலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பெரென்டோர்ப்க்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் 2 ஆட்டத்திலும் விக்கெட் வீழ்த்தாத சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கழற்றி விடப்பட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக பில்லி ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் தொடரை போல் ஒருநாள் போட்டி தொடரையும் வென்று சாதனையுடன் நாடு திரும்ப இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் ஒருநாள் போட்டி தொடரை வென்று இழந்த பெருமையை மீட்டெடுக்க ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் ஒருநாள் போட்டியில் இதுவரை 130 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 74 ஆட்டத்திலும், இந்தியா 46 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 10 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 14 ஒருநாள் போட்டியில் சந்தித்துள்ளது. இதில் இந்திய அணி 9 ஆட்டத்தில் தோல்வியும், 5 ஆட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் காரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், பீட்டர் சிடில், ஜெயே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, பில்லி ஸ்டான்லேக்.

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் அல்லது விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது, முகமது ஷமி.

இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.